கே.பி.என். பேருந்து
மிழகத்தில் கே.பி.என். டிராவல்ஸ் என்கிற  பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது.  “ஏழாவது மட்டுமே  படித்தவர்…  இன்று 210 பஸ்களுக்கு முதலாளி….” என்று கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி. நடராஜனின் பேட்டியை ஏதாவது ஒரு ஊடகத்தில் படித்திருப்பீர்கள்.
இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.
அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன.
“இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில்,95 படுக்கை வசதி கொண்டவை” என்றும் பெருமையாக பேட்டி கொடுப்பார் கே.பி. நடராஜன்.
இன்னொரு புறம், “கே.பி.என்.” பெயரைக்கேட்டாலே பயணிகள் அலறுகிறார்கள். இதற்குக் காரணம் சமீபகாலமாக இந் நிறுவனத்தின் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதுதான். இதில் பலர் பலியாகிய சோகமும் நடந்திருக்கிறது.
கடந்த ஆட்சி காலத்தன் கே.பி.என். டிராவல்ஸ் பேருந்து விபத்துக்குள்ளாகி 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியானதும் அவர்களது குடும்பத்திற்கு அரசு நிதி உதவி அளித்ததும் நடந்தது. சமீப காலத்திலும் கே.பி.என். விபத்துக்களுக்கு குறைவில்லை.

போதை ஓட்டுநரால் நின்ற கே.பி.என். பேருந்து
போதை ஓட்டுநரால் நின்ற கே.பி.என். பேருந்து

அதோடு இந் நிறுவன ஓட்டுநர்கள் பற்றி நிறைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும்போதே குடிப்பது என்று தொடர்ந்து புகார்கள் அணிவகுக்கின்றன.
சில நாட்களுக்கு முன் மதுரை அருகே வாகனத்தை ஓட்டிக்கொண்டே மது அருந்திய ஓட்டுநரை பயணிகள் கண்டிக்க.. அவர் வண்டியை நிறுத்திவிட்டு ஓடியது நடந்தது. அதே போல அதீத போதை மயக்கத்தில் வாகனத்தை ஓட்ட முயன்ற ஓட்டுநரை பயணிகள் தடுத்ததும், அந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவியதும் பலரும் அறிந்த விசயம்தான்.
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி,  நாம் பயணித்த கே.பி.என். டிராவல்ஸ் பேருந்து விபத்துக்குள்ளானது.  கொடைக்காணலில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த அந் நிறுவனத்தின்  தூங்கும் வசதி பேருந்து திருச்சிக்கு முன்னதாக சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் மோதியது.
திருச்சி அருகே விபத்துக்குள்ளான கே.பி.என். பேருந்து
திருச்சி அருகே விபத்துக்குள்ளான கே.பி.என். பேருந்து

தாமததமாகவாவது சுதாரித்த ஓட்டுநர், சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். சில விநாடிகள் தாமதம் ஆகியிருந்தாலும் எதிர் புறத்தில் இருந்து வரும் வாகனத்தில் மோதி பெரும் விபத்து, உயிர்பலி ஏற்பட்டிருக்கும்.
இந்த விபத்தில் உயிர்பலி, பெரும் காயம் இல்லைதான். ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு வண்டி விபத்துக்குள்ளாகி நின்றுவிட்டது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று பயணிகள் நடு சாலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் கே.பி.என். டிராவல்ஸ்ஸின் அலுவலங்களுக்கு தொடர்புகொண்டால்,  பல எண்கள் எடுக்கவே இல்லை. எடுத்தவர்களும், சரியாக பதில் சொல்லவில்லை.
விபத்துக்குள்ளான பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், “நான் என்ன சார் செய்யறது.. போன் எடுக்கமாட்டேங்குது” என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டார்.
“இருநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸில் ஸ்பேர் பஸ் இல்லையா” என்ற கேள்விக்கு பதில் இல்லை.
பிறகு பயணிகள் பலரும் திருச்சி சென்று, அங்கிருந்து தாங்கள் செல்லவேண்டிய ஊர்களுக்கு வேறு பேருந்தை பிடித்துச் சென்றார்கள்.
தவிர விபததுக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனறு சொல்லப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.
கே.பி. நடராஜன்
கே.பி. நடராஜன்

இந்த நிலையில் கே.பி.என். நிறுவனம் அளித்திருக்கும் பல எண்களை தொடர்புகொண்டும் உரிய  தீர்வு… ஏன், விளக்கம்கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் கே.பி.என். டிராவல்ஸ் நிறுவனத்தின் சேலம் தலைமை அலுவலகத்தை தொடர்ந்து தொடர்புகொண்டோம். பிறகு “டிராக்கிங்” பிரிவில் பணியாற்றும் தேவராஜ் என்பவர் பேசினார்.
“உங்கள் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளாகிவிட்ட நிலையில், மாற்று பேருந்து ஏற்பாடு செய்துதரவே இல்லையே..” என்றோம்.
“வண்டி இருக்கின்றன. ஆனால் போதிய ஓட்டுநர்கள் இல்லை. அதனால் மாற்று பேருந்து அனுப்ப முடியவில்லை” என்றார்.
“அப்படி ஒரு சூழல் நிலவுவது உங்களது தவறுதானே..” என்றோம்
“ஆமாம்” என்று ஒப்புக்கொண்டவர், “ஓட்டுநர்கள் சரியான தகவல் சொல்வதில்லை. விபத்து ஆனாலும் அப்படியே நிற்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். வாராவாரம் ஞாயிறு அன்று மீட்டிங் நடக்கும். அப்போது வண்டியில் உள்ள பிரச்சினைகள் பற்றி கூறலாம். ஆனால் ஓட்டுநர்கள் சொல்வதில்லை. பிரச்சினைகளுக்கு எல்லாம் ஓட்டுநர்கள்தான் காரணம்” என்றார்.
சரி ஓட்டுநர்கள்தான் விபத்துக்களுக்கு காரணம் என்றால், வேறு தகுதியான ஓட்டுநர்களை வைத்துக்கொள்வது நிர்வாகத்தின் கடமை தானே என்றோம். அதற்கு பதில் இல்லை.
இடையிலேயே போனை கட் செய்துவிட்டார்.
கே.பி.என் டிராவல்ஸ் அதிபர் கே.பி. நடராஜன், சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில் “அடுத்ததாக விமான சேவை துவங்க திட்டமிட்டிருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.
முதலில் தரையில் ஓடும் பேருந்து சர்வீஸை, கவனத்துடன், பாதுகாப்பாக  நடத்தட்டும். அதன் பிறகு ஆகாயத்துக்கு பறக்கலாம், நடராஜன் சார்!

  • டி.வி.எஸ். சோமு