புத்தாண்டு கோலாகலத்தின்போது விபத்து! 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை,

சென்னையில் நள்ளிரவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி வெளியாகி உள்ளது.

நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்பட பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்றனர்.

இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தீப்பொறி பறக்க புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி  அதிவேகத்தில் வலம் வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற  புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்ற 150க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள  ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனை களில்  பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.