’இந்தியன்-2’ உதவி இயக்குநரே தயாரிப்பு லைகாமீது புகார்..

சென்னை நசரத்பேட்டையில் நடந்த இந்தியன் -2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரத்தில் தினம் ஒரு தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

’ படப்பிடிப்பு நடந்த ஈ.வி.பி. ஸ்டூடியோ, கிரேன் உள்ளிட்ட கருவிகளை வைத்து படப்பிடிப்பு நடத்த லாயக்கற்ற இடம்’ என்று குற்றம் சாட்டி இருந்தது, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளமான ’பெப்சி’

’’நூறடி உயர கிரேனை கையாள பெப்சியில் உள்ள உறுப்பினர்களுக்கு பயிற்சி இல்லாத சூழலில் அந்த கிரேனை புரிதல் இல்லாமல் பயன்படுத்தியது குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

பெப்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை வைத்து ஷுட்டிங் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு.
இந்த விபத்து குறித்து ஷங்கரின் இணை இயக்குநர் பரத்குமார் என்பவர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் மீதே அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘ விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஆபரேட்டர் ராஜன் அலட்சியமான முறையில் நடந்து கொண்டதே உயிர் பலிக்கு காரணம். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.லைகா நிறுவன தயாரிப்பு நிர்வாகி சுந்தரராஜன், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் ஷுட்டிங் நடத்தியுள்ளார்.’’ என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜன், சுந்தரராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ் ராஜனை கைது செய்துள்ளது.
அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, விபத்து நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது கமலஹாசன், காஜல் அகர்வால், ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

-ஏழுமலை வெங்கடேசன்