பொது இடங்களில் பலர் முன் கொலை உட்பட எந்தவித குற்றச் செயல் நடந்தாலும் சாட்சி சொல்ல பொது மக்கள் பயப்படுகிறார்கள். இது ஏன் என்பதை தனது அனுபவத்தை முகநூலில் பதிந்திருக்கிறார் கவிஞர் சக்தி செல்வி.
“கடந்த வருடம் மே மாதத்தில் ஒரு நாள் என் கடை முன் ஒரு சாலை விபத்து.
இரு சக்கர வாகனம் பேருந்தில் மோத… வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் எனக்கு முன் வந்து விழுந்தார். அதிர்ச்சியில் நான் அலறினேன். அந்த நபரை தூக்குவதற்கு கடையில் இருந்த அனைவரும் பதறியபடி ஓடிவந்தனர்.
ஆனால் விழுந்த சில நொடிகளில் அவன் மூளை வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவன், சாதாரணமாக எழுந்து வந்தான். தனது கை பேசியில் தனது நண்பனின் மரணத்தை புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டான். இது எனக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்தது. (பலியான இளைஞனின் செருப்புகளை அந்த வழியே வந்த ஒருவன் இயல்பாக அணிந்து சென்றது இன்னொரு அதிர்ச்சி.)
பிறகு  காவல் துறை வந்தது.
“ உங்கள் கடைக்கு முன் விபத்து நடந்திருக்கிறது.. விபத்தை நீங்கள் பார்த்தீர்களா” என்றார் காவலர்.  “ஆமாம்..” என்றேன். “என்ன நடந்தது..” என்றார்.
“இரு சக்கரவாகனம் பேருந்தின் மீது மோதியது. பின்னால் அமர்ந்திருந்தவன் தூக்கி வீசப்பட்டு என் கடை அருகில் விழுந்தார். சில வினாடிகளில் அவன் மூளை வெளியே வரத்துவங்கியது. அவன் இறந்துவிட்டான். வண்டியை ஓட்டிவந்தவனக்கு அடி பலமாக இல்லை” என்றேன்.
காவலரோ, “இறந்துபோனவன்தான் வண்டியை ஓட்டி வந்தான்” என்றார்,   அவரே விபத்தை ஏதோ நேரில் பார்த்தது போல.
நான் மறுத்தேன். அவரோ,  “இல்லையில்லை.. பலியானவன்தான் வண்டி ஓட்டினான்” என்று அதையே திரும்பத்திரும்ப வலியுறுத்தினார்.
இதனால் எங்களுக்குள் கடும் வாக்குவாதம்.
பிறகு, “எதற்கு சார் விவாதம்?   பக்கத்து கடையில் சிசிடிவி காமிரா இருக்கிறது. அதில் பார்த்துவிடலாம்.. வாருங்கள்” என்றேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பக்கத்துக் கடைக்காரர் பதட்டத்துடன் ஓடிவந்து, “அய்யய்யோ.. பல நாட்களாக எங்கள் சிசிடிவி வேலை செய்வதில்லை” என்றார்.
காவலர் மீண்டும் சொன்னதை திரும்ப சொன்னார். நானோ, “நாங்கள் பார்த்ததை தான் சொல்ல முடியும்.  நீங்கள் நினைப்பதை நாங்கள் சொல்ல முடியாது” என்றதும் பேசாமல் சென்றுவிட்டார்.
பக்கத்தில் இருந்த பலரும், “னக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை” என்று  கடிந்து கொண்டனர்.
காவல்துறை எப்படி சாட்சிகளை உருவாக்குகிறது என்பதற்கு ஒரு நேரடி அனுபவ உதாரணம் இது.
இந்த லட்சணத்தில், “குற்றச் செயல் நடந்தால் சாட்சி சொல்ல மக்கள் பயப்படுகிறார்களே” என்று சமூகவலைதளங்களில் சிலர் பொங்குகிறார்கள். அதுபோன்ற பதிவுகளைப் பார்த்து மவுனமாக கடந்துவிடுகிறேன் நான்.”