டெல்லி: தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 731 ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் மாணவா்களைச் சோப்பதற்கு அங்கீகாரம் வழங்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாத, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக, 58 பிஎட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

மேலும், 13 பிஎட் கல்லூரிகள் பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறவில்லை என்று கூறி, அங்கு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக,  தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையை பின்பற்றாத  கல்லூரிகளுக்கு  என்சிடிஇ கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து விதிகளை மீறி செயல்படும் பி.எட் கல்லூரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் செயல்படும் 71 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அதற்குரிய எந்தப் பொறுப்பினையும் கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.