உத்திரப் பிரதேசம் : சிறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி

ஃபரிதாபாத்

.பி.  மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள சிறையில் கைதி ஒருவர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவுடி சிவேந்திர சிங்.   சுமார் 40 வயதாகும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  இவர் கடந்த ஆறு மாதங்களாக ஒரு கொலைக் குற்றத்தில் தண்டனை பெற்று சிறையில் அடைக்க பட்டுள்ளார்.   இவருடைய பிறந்த நாள் ஜூலை மாதம் 23ஆம் தேதி வந்தது.

அதை ஒட்டி சிவேந்திர சிங் ஜெயிலில் தனது அறைக்கு வெளியே சக கைதிகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்.    இந்த பிறந்த நாள் நிகழ்வை  வீடியோவாக சிறை அதிகாரி ஒருவர்  எடுத்துள்ளார்.  இந்த வீடியோ வெளியாகி வைரலாகியது.

கடந்த மாதம் ஜூலை மாதம் 25ஆம் தேதி நீதிமன்றத்துக்கு சிவேந்திர சிங் அழைத்து வரப்பட்டுள்ளார்.   அப்போது செய்தியாளர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து விசாரித்துள்ளனர்.

அதற்கு சிவேந்திர சிங், ”எனது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சிறை அதிகாரி வினய் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.   இதற்காக நான் அவருக்கு ரூ.1 லட்சம் பணம் அளித்தேன்.  அது மட்டுமின்றி சிறையில் மொபைல் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் நான் பணம் அளிக்கிறேன்” என பதில் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சிறைத்துறையில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.  உத்திரப் பிரதேச சிறைத்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து துறை விசாரணை நடத்தப் பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.