சென்னை:

குரூப் 4  தகுதியிலான  9,351  பணியிடங்களுக்கான தேர்வை  தமிழக அரசுப் பணிகளுக்கான  தேர்வாணையம்  அறிவித்தது இதற்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது சாதனையா, வேதனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. – தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் – வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 9,351 காலிப் பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கான கடைசி நாள் கடந்த 13ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்பு காரணமாக விண்ணபிப்பதற்கான கடைசி நாள் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 9,040 பேர் கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர்.  ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வுக்கு  20.83  லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில்  11.34 லட்சம் பேர் பெண்கள்,  9.48 லட்சம் பேர் ஆண்கள்.  54 பேர்  மூன்றாம் பாலினத்தவர்.

இதன்மூலம் டி.என்.பி.எஸ்.சி வரலாற்றில் முதல் முறையாக அதிகளவு விண்ணப்பங்கள் வந்து சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரம், பத்தாம் வகுப்பு தகுதியுள்ள இந்த பணிக்கு ஆகப்பெரும்பாலோர் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்றுக கூறப்படுகிறது.

படிப்புக்குத் தகுதியான வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கில் இளைஞர்கள் திண்டாடுவதை வெளிப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் தொகை மற்றும்  படித்தோர் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பை உருவாக்காததே இதற்குக் காரணம் என்றும், இது சாதனை அல்ல வேதனை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.