புதுடெல்லி: நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை தொடர்பாக மோடியின் அரசை கடுமையாக தாக்கியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரச்சினையைப் புரிந்துகொள்வது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

“இந்தியாவின் இப்போதைய தேவை பிரச்சாரம் அல்ல. பொய்யான தகவல்களைப் பரப்புவதை விடுத்து, ஒரு வலுவான திட்டத்தை உருவாக்க வேண்டியதே காலத்தின தேவை” என்று அவர் கூறினார்.

பொருளாதார மந்தநிலை குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்படுவதற்கான காரணங்களாக பல நகைப்புக்குரிய அம்சங்களை சுட்டிக் காட்டினார்.

இளைஞர்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி, இஎம்ஐ கட்ட விரும்பாமல், ஓலா மற்றும் உபேர் ஆகிய சேவைகளை அதிகம் பயன்படுத்துவதும் அத்துறையின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று கூறியிருந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு மார்ச் துவங்கி, இந்த 2019ம் ஆண்டின் காலாண்டு முடிவில்தான் ஜிடிபி வளர்ச்சி மிகவும் மோசமாக 5% என்ற அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசிற்கு பொருளாதாரத்தின் பல நிலைகளிலும் சவால்கள் காத்துக் கொண்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் குறைந்துள்ளன என்று கூறப்படுகிறது.