சென்னை:

யுத பூஜையை முன்னிட்டு  சாலையில்  பூசணிக்காய் உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை. துர்க்கை அம்மனுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மகிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்க்கை. இந்த நாளையே துர்க்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர்.

கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றை கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம். ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

பூஜையைத் தொடர்ந்து திருஷ்டி பூசணிக்காய் சுற்றி உடைப்பதை மக்கள் வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.  சாலையில் உடைக்கப்படும் பூசணிகாய்களில் சிக்கி வாகனகங்கள் விபத்துக்குள்ளா வதும் அதிகரித்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம் என்றும்,  பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும். மேலும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.