அதிரடி தொடர்: வறண்ட அரசியல் வானில்… ரஜினி மேகம்…!! May Come…? -நியோகி

திரு. ரஜினிகாந்த்…அரசியலுக்கு வருவாரா…?

இந்த பில்லியன் டாலர் கேள்விக்கு, பதில் தேடி ஏங்காத ரஜினி ரசிகர்களே இங்கு இல்லை எனலாம் ! அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்…? வந்தால், யாருக்கு – என்ன நன்மை…? வந்தே ஆக வேண்டிய அவசியம் என்ன…? அதனால் தமிழகம் எவ்வாறு மேம்படும்…?

தமிழ் சினிமாவில், அவரிடம் துணிந்து கேள்விகள் கேட்க யாருமே இல்லாதபடிக்கு, தனிக் காட்டு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருக்கும் திரு. ரஜினிகாந்த், அரசியலிலும் அவ்வாறே கோலோச்சி விட முடியுமா…? “அட, ஆனதைப் பார்த்து விடுவோம்….” என்னும் அசட்டு துணிச்சலுக்கு ஆட்படும் ஆளா அவர்..?

அவருக்கு, சனி திசை முடிந்து – புதன் திசை ஆரம்பம் ஆகிறது என்கிறார்களே…? அவரது ஜாதகத்தில்…லக்கினத்துக்கு, ஐந்தாம் இடத்தில் புதனும் சுக்கிரனும் அமர்ந்து, லாப ஸ்தானத்தை பார்ப்பதால் எல்லாம் வெற்றி என்கிறார்களே…? ஆனால், சுக்கிரனும் – புதனும் அமர்ந்திருப்பது தனுர் ராசியில் அல்லவா…? அது, குழப்பம் ஏற்படுத்தும் குணமுடையது என்றும் சிலர் சொல்கிறார்களே…? அது, உண்மைதானா..?

ஒருவேளை, அப்படி அவர் அரசியலுக்கு வந்தே விட்டால், எந்த எந்த கருத்தியல்களெல்லாம் இந்த மண்ணில்… தங்கள் வலுவை இழக்கக் கூடும்…? எந்த கருத்தியலுக்கு வலு கூடக் கூடும்…?

அரசியல் பற்றி பேராசான் திருவள்ளுவர் என்ன சொல்கிறார்…? சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அறியாதவரா அவர்…?

இன்று அவருக்கு வயது 67. அவரது ஆரம்ப கால வீரிய ரசிகர்கள் எல்லோரும் சராசரியாக 50 வயதைக் கடந்தவர்கள். இன்றும் அவருக்கு தீவிர ரசிகர்கள் உண்டு என்றாலும், இதற்கு மேல் அவர் அரசியலுக்கு வருவது, தனிப்பட்ட வகையில் அவருக்கு எந்த விதத்தில்  லாபம் பயக்கும்…?

இது போன்ற ஆயிரத்தெட்டுக் கேள்விகளையெல்லாம் தாண்டி வெறும் “விருப்பம்” என்ற வகையிலேயே ரசிகர்கள் அவரை அழைக்கிறார்களா..?

ரசிகர்களைத் தாண்டி தமிழ்மக்களும் அவரது அரசியல் பிரவேசத்தை ஆமோதிக்கிறார்களா…?

தனது இருபதாண்டுக் கால தயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியே வருவாரா…? வந்தால் வெல்வாரா…?

பார்ப்போம் !

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா…?

கடந்த நாற்பதாண்டுக் காலமாக தமிழக மண்ணின் அரசியல் முடிவுகளை நிர்ணயித்தவர்கள் எல்லோரும், ஏதோ ஒரு வகையில் “சினிமா கரீஷ்மா” வோடு இருந்தவர்களே ! திரையில் அவர்களைக் கண்டு மயங்கிய மக்கள், விலைமதிப்பில்லாத தங்களது ஓட்டுக்களையும் அவர்களுக்கே போட்டார்கள் ! கவர்ச்சியோடு கூடிய  மாஸ் லீடர்களாக மக்கள் மனதில் இருந்தவர்களே ஆட்சியையும் பிடித்தார்கள் !

ஆனால், இன்று அப்படிப்பட்டதோர் “கவர்ச்சித் தலைமை” இன்று எந்த கட்சியிலும் இல்லை. திரு.விஜயகாந்த் அவர்களோடு அது நின்றுவிட்டது என்று சொல்பவர்கள் இருக்கலாம். ஆனால், சிகரெட் – மது போன்று… இடை விடாததொரு பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட, பாழும் சாமானிய மக்கள், அடுத்து ஒரு சையிண்டிஸ்டையோ அல்லது ப்ரொஃபசரையோ இந்த நாட்டுக்கு ஆள வரும்படி அழைத்து விடுவார்கள் என்று எதிர் பார்த்து விட முடியாதல்லவா…!?

“அரசாங்கம் என்பது மக்களுக்கானது ! மக்களை நல்வழியில் கொண்டு செலுத்தும் நல்லோருக்கே எங்கள் ஓட்டு…” என்னும் முடிவுக்கு மக்கள் வர வேண்டும். அதுதான் முதிர்ச்சியடைந்த ஓர் சமூகத்துக்கு அழகு ! அப்படி ஒரு முடிவுக்கு வர, தமிழக மக்கள் இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது விடை தெரியாததோர் புதிர் !

இந்த நிலையில், “சம்பாதிக்கத்தான் அரசியல்” என முண்டியடிக்கும் கெட்ட சக்திகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள விரும்பும் மக்களால்… ரஜினிக்கு ஓர் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது

இன்றைய கணக்குப் படி, அவருக்கு ஏறத்தாழ இரண்டு கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், திரைத்துறையில்… திரு.கமலஹாசன் உட்பட, தன் சக நடிகர்கள் அனைவரோடும் அவர் நல்ல உறவையே இதுகாறும் பேணி வந்திருக்கிறார் என்பதால், மற்ற மற்ற ரசிகர்களின் ஆதரவும் அவருக்கு கிடைக்கலாம்…! ஆக, இரண்டு கோடி என்னும் அந்த எண்ணிக்கை, எளிதாக மூன்று கோடிகளை கடக்கலாம் !

இந்த எண்ணிக்கை சாதாரண எண்ணிக்கை அல்ல ! இந்த மண்ணை மாறி மாறி ஆண்ட கட்சிகளான,  அதிமுக – திமுக வின் ஒட்டுமொத்த தொண்டர் பலத்தை விட மிகப் பெரிது.

ரஜினிகாந்த் அவர்களின் திரையுலக பயணத்தை உற்றுக் கவனித்தால்… அந்தந்த சமயத்தில் யார் யார் திறமைசாலியாக ஜொலிக்கிறார்களோ, அவர்களை மட்டுமே தன்னோடு வைத்துக் கொண்டு பயணித்திருக்கிறார் என்பதை நாம்  புரிந்து கொள்ளலாம்.

ரஜினியோடு அதிகப் படங்களை செய்தவர் இயக்குனர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள் ! 25 திரைப்படங்கள் ! ஆனால், ஒரு கட்டத்தில், ட்ரெண்ட் மாறியபோது கொஞ்சமும் யோசிக்காமல் அவரை விட்டு விட்டார். ஆனால், இன்றுவரை தன் சகோதரருக்கு இணையாக வைத்து அவரை மதிக்கிறார். இளையராஜாவின் பாடல்களுக்கு ஆடியவர் – ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களுக்கும் ஆடினார். தொழில் நுட்பக் கலைஞர்களையும் கூட மாற்றினார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது… வேண்டியவர்கள் – வேண்டாதவர்கள் – நண்பர்கள் – தனக்குப் பிடித்தவர்கள் என்றெல்லாம் அவர் ரிஸ்க் எடுப்பதே இல்லை !  வெற்றி ஒன்றே அவருக்கு முக்கியம் ! அதில், அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார் !

ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால்…வேண்டிவர் – வேண்டப்படாதவர் என்றெல்லாம் பார பட்சம் பார்க்காமல், நல்ல நல்ல திறமையான அதிகாரிகளை மட்டுமே தன்னோடு சேர்த்துக் கொண்டு, நல்லாட்சியை நோக்கிப் போவார் என்னும் நம்பிக்கை மக்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது !

தான் சம்பந்தப்பட்ட படங்கள் சரியாக போகாத போது அதற்குண்டான நட்டப் பணத்தை விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டவர் ரஜினி ! தேவைக்கு மிக மிக அதிகமாகவே சம்பாத்தித்து விட்டவர் ! ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் ! ஆக, இவர் கொள்ளையடித்து விடுவார் என்ற எண்ணம் மக்களுக்கு வரவே வாய்ப்பில்லை.

சினிமாவுக்கு வெளியே அவர் நடித்ததில்லை. வழுக்கை விழுந்த தலையோடு துணிந்து மேடையிலேறி, “நான் எதார்த்தமானவன்…” என்ற பிம்பத்தை மக்கள் மனதில் ஆழப் பதித்து வைத்திருக்கிறார். மேடைகளில் நாகரீகமாக அதே சமயத்தில் ஆணித்தரமாக பேசுபவர் !

அவரது மேடைப் பேச்சில், இன்னமும் கூட கன்னட வாசனை அடிக்கும். அதை அவர் வலிந்து மாற்றிக் கொள்ள ப்ரயத்தனப்பட்டதில்லை. செந்தமிழில் பேசிக் காட்டுகிறேன். கவிதை எழுதுகிறேன். தமிழ்தான் என் உயிர் மூச்சு என்றெல்லாம் அவர் பம்மாத்து வேலைகளை செய்ததில்லை. “நான் இப்படித்தான்…. நான் இப்படி இருப்பதால், உங்களுக்கு என்ன தொல்லை….?” என்பது போல சினேகமாக சிரித்து வசீகரிக்கக் கூடியவர்.

எத்தனை ட்ரெண்ட் மாறினாலும், சினிமாவில் அவரை அசைக்கவே முடிந்ததில்லை.

எல்லாம் சரிதான். ஆயினும், சினிமா உலகத்தில் சாமர்த்தியம் காட்டுவது என்பது வேறு; அரசியல் உலகம் என்பது முற்றிலும் வேறு ! இங்கு எதிர்பாராத் தன்மைகள் அதிகம் ! ரஜினி அவர்கள் ஏற்றுக் கொண்டு பிறகு ட்ராப் செய்த படங்கள் நிறைய உண்டு. அப்படி ஒரு கட்சியை ட்ராப் செய்துவிட முடியாது. விடாமல் மல்லுக் கட்டியே ஆக வேண்டும் !

365 நாளும், விதம்விதமான பிரச்சினைகள் வாசலுக்கு வரும். நிம்மதியாக உறங்க விடாது. 30 வயதுடைய இளைஞன் ஒருவனின் ஓயாத உழைப்பை அது, 67 வயது ரஜினியிடம் எதிர்பார்க்கும். நடக்காவிட்டால் மனம் சலிக்கும். திட்டும். எதிரிகள் அதிகமாவார்கள். அவர்கள் பழைய தவறுகளை எல்லாம் தோண்டி எடுத்து, வர்ணம் பூசிக் காட்டுவார்கள். ரஜினி, ரஜினியின் கார் ட்ரைவர், அவர் ஓட்டும் கார், அதன் டயர், அந்த டயரில் குறைவாக இருக்கும் காற்று என்று ஒன்றைக் கூட விடாமல்,  சகலத்தையும் பிரித்து மேய்வார்கள். அணடை மாநிலங்களோடு உறவுகள் மாறலாம். அது அவரது சினிமா மார்கெட்டில் பிரதிபலிக்கலாம். நாடெங்கும் அவருக்கு சொத்துக்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு சிக்கல் வரலாம்.

இப்படிப் பலப்பல பிரச்சினைகளை அலசிக் கடந்து தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும்.

அப்படிக் கஷ்டப்பட்டாவது ஏன் அவர் அரசியலுக்கு வர வேண்டும்…?

பார்க்கலாம்…

(தொடரும்…

கார்ட்டூன் கேலரி