“மற்றவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் நடவடிக்கை எடுங்கள்” – நிறவெறி குறித்து கோலி சீற்றம்

சிட்னி: கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிறவெறி தொடர்பான நிகழ்வுகளை கடுமையாக கண்டித்துள்ள இந்தியக் கேப்டன் விராத் கோலி, சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ரசிகர்களால், இந்திய வீரர்கள் நிறவெறி தொடர்பான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இது உலகளவில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

விராத் கோலி கூறியிருப்பதாவது, “இனவெறி தொடர்பான வெளிப்பாடுகளை ஏற்கவே முடியாது. பவுண்டரி எல்லையில் இதுபோன்று அடிக்கடி நடப்பது ஏற்க முடியாத ஒன்று. ரசிகர்களின் அராஜகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

விளையாட்டு களத்தில் இதையெல்லாம் பார்ப்பது மோசமான ஒன்று. எனவே, இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விரைவாக விசாரித்து, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுள்ளார் கோலி.

ஐசிசி கண்டனம்

“சிட்னி டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. எங்களின் விளையாட்டில், நாங்கள் எந்தவகையிலும் நிறவெறியை அனுமதிப்பதில்லை. இது ஏற்கவே முடியாத ஒன்று” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.