சென்னை

அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.  திமுக அணி சார்பில் அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் சென்னை நகர் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  இந்நிலையில் அவர் செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது செய்தியாளர் நீங்கள் இருமுறை தமிழக ஆளுநரிடம் தற்போதைய அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பல பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தீர்கள்.   உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த விசாரணை எவ்வாறு நடக்கும்?  அதிமுக ஆட்சிக் காலத்தில் பல திமுக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுத்தது போல் இதுவும் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்குமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முக ஸ்டாலின் ”நிச்சயமாக இது பழி வாங்கும் நடவடிக்கை இல்லை.  பத்து ஆண்டுகளாக அரசாங்கத்தின் பணம் மற்றும் பொதுமக்களின் பணம் ஏராளமாகச் சூறையாடப்பட்டுள்ளது.  எனவே அது தொடர்பாக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.    அரசின் பணிகளில் ஒன்று குற்றவாளிகளை தண்டிப்பது ஆகும்.  அது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.” எனப் பதில் அளித்துள்ளார்.