சென்னை:

சமூக வளைதளங்களில் எனக்கு கணக்கு கிடையாது. எனது பெயரில் விமர்சனங்கள், கருத்துக்கள் என்னுடையது கிடையாது என்று நடிகர் அஜித் தனது வக்கீல் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது வக்கீல் ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு பொது அறிவிப்பில், ‘‘நடிகர் அஜித்குமார் பெயரையோ, புகைப்படத்தையோ அவரது அனுமதியின்றி எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. நடிகர் அஜித்குமார் எந்த வணிக சின்னத்திற்கும், பொருளுக்கும், நிறுவனத்திற்கும் விளம்பர தூதர் இல்லை. எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ, சமூக வலைதளங்களையோ அஜித் அங்கீகரிக்கவில்லை.

அஜித்துக்கு பேஸ்புக், டுவிட்டர், ஸ்நாப்சாட் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் கணக்கு இல்லை என்றும், அதுபோன்ற பெயர்களில் செயல்படும் கணக்குகள் போலியானவை’’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், ‘‘ அஜித் தனக்கு அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்று ஒன்றும் இல்லை. சமூகவலைதளங்களில் அஜித் பெயரில் வரும் விமனர்சனங்கள் அவருக்கு மன உளைச்சலை அளிக்கிறது.

அஜித் பெயரை தவறாக பயன்படுத்துவோர் அடையாளம் காணப்பட வேண்டும். பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என யாருடைய மனதாவது இது போன்ற நபர்களால் புண் பட்டிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.