‘’இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் வழக்கம் இருப்பது உண்மைதான்’’ – அக்‌ஷய் குமார் பரபரப்பு தகவல்..

 

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்க மும்பை பறந்து வந்த சி.பி.ஐ., இந்தி சினிமா உலகில் நடிகர்- நடிகைகளிடம் போதைப்பொருள் வழக்கம் இருப்பதை கண்டு பிடித்தது.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிர விசாரணை நடத்தி ,நடிகை ரியாவை கைது செய்தனர்.

நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டோர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார், முதன் முறையாக இப்போது மனம் திறந்துள்ளார்.

நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,’’ கனத்த இதயத்துடன் உங்களிடம் பேசுகிறேன்’ என உணர்ச்சிகரமான உரையாடலுடன் வீடியோ பேச்சை ஆரம்பித்து, ’’ரசிகர்கள் இல்லாமல் இந்தி சினிமா உலகம் கிடையாது, ஸ்டார்கள் இல்லை’’ என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டவர்’’.

“இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பது உண்மையே’’ என ஒப்புக்கொண்டுள்ளார். ’’ஆனால் எல்லோரும் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என நினைக்க வேண்டாம் மற்ற துறைகளில் இருப்பது போல் இந்தி சினிமாவிலும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் உள்ளனர்’’ என அந்த வீடியோ பதிவில் அக்‌ஷய் குமார் குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.