சென்னை:

நடிகர் கமல் மட்டுமின்றி அரசியல் குறித்து நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரும் கருத்துக்களை டுவிட் செய்து வருகின்றனர். இந்து தீவிரவாதம் இருக்கிறது என்று கமல் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் கமல் மீது உ.பி.யில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி இதே கருத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ‘‘தீவிரவாதம் என்பது ஒரு நபர் சட்டவிரோதமாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகும். குறிப்பாக பொது மக்களுக்கு எதிராக அரசியல் லாபத்திற்காக செயல்படுவது தான் தீவிரவாதம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த மாதம் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவம் தொடர்பாக பிரதமர் மவுனமாக இருப்பதோடு, அவரது கொலையை சிலர் கொண்டிய தகவல் சமூக வலை தளங்களில் வெளியானது கவலை அளிக்கிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்தார். இதேபோல் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி.க்கு எதிரான கருத்துகளுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த படத்துக்கு ஆதரவாக அரவிந்த்சாமி கருத்து தெரிவித்திருந்தார்.

மக்கள் பிரச்னை மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களில் நடிகர்கள் கருத்து தெரிவித்து வருவது அதிகரித்துள்ளது.