கொச்சி: நடிகை கடத்தல் வழக்கில் கடந்த இரு மாதங்களாக ஆலுவா சிறையில் இருந்த நடிகர் திலீப், தனது தந்தையின் நினைவு தின சடங்கில் கலந்து கொள்வதற்காக இரண்டு மணி நேர பரோலில் வெளியே வந்துள்ளார்.

படப்பிடிப்பில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த கேரள நடிகை, காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம்  தேதி கைது செய்யப்பட்டார்.

கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கடந்த மாதம் 24-ஆம் தேதி திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.  இரண்டாவது முறையாக திலீப்பின் ஜாமீன் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனது தந்தைக்கு இன்று (புதன்கிழமை ) இறுதி சடங்கு நடைபெறுவதால் பரோல் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் திலீப் விண்ணப்பித்திருந்தார். இந்த சடங்கு இரு இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திலீப்புக்கு பரோல் வழங்கி கடந்த சனிக்கிழமை அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தந்தையின் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று ஆலுவா சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார் திலீப்.