புதிய கட்சி தொடங்குவது உறுதி!! ரசிகர்களிடம் கமல் திட்டவட்டம்

சென்னை:

புதிய கட்சி தொடங்குவது உறுதி என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் நடந்த 63வது பிறந்தநாள் விழா, நற்பணி இயக்க 39வது ஆண்டு விழாவில் நடிகர் கமல் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்களுக்கு உதவும் வள்ளல் தேசத்தை உருவாக்கும் நாடு இது. மன்னர் முன் கையேந்தும் கூட்டம் இல்லை. கையேந்து பவன் நான். தமிழகத்திற்காக ஏந்துகிறேன். தமிழக நலனு க்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை. பணக்காரர்கள் வரியை சரியாக செலுத்தினாலே நாடு ஓரளவு சரியாகும்.ஏதோ ஆர்வத்திற்காக பதவிக்காக பிரச்னைகள் பற்றி நான் பேசவில்லை’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறை திரும்ப திரும்ப செய்கிறோம். இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரர்கள் என்று தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா?. உறவுகள் இறந்த பின் தான் புத்தி வருமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும். அடக்குமுறை என்பது அரசியலில் யதார்த்தமாகிவிட்டது. எத்தனை பேர் மிரட்டுகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமில்லை. என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியம். அடி வாங்கிக் கொள்கிறேன். அடிக்கடி தட்டுவதற்கு நான் மிருதங்கம் அல்ல’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘கோவில்களை இடிக்க வேண்டும் என நான் கூறியதில்லை. அவை நமது கட்டடம். உ.பி.யில் இருக்கும் இந்துவை விட இங்கு என் குடும்பத்தில் இருக்கும் இந்துக்களை பார்த்து பயமாக இருக்கிறது. மதத்தின் பெயரால் மருந்து என சொல்லிக் கொண்டு விஷம் தருவதை அருந்தாதீர்கள். நான் சிறைக்கு போவது அவமானம் இல்லை. திருடிவிட்டா செல்கிறேன். அதனால் தயாராகவே இருக்கிறேன். திருட்டுத்தனம் செய்பவர்கள் பெரிய மனிதர்களைப் போல் நடிப்பதை பொறுக்க முடிவதில்லை.

நான் கட்சி துவங்கி அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாக தான் செய்ய முடியும். கட்சி துவங்குவதன் முதல் பணி தான் மொபைல் ஆப் அறிமுகம். வரும் 7ம் தேதி மொபைல் போன் செயலியின் பெயரும், செய்முறை விளக்கமும் அறிமுகம் செய்யப்படும். கட்சி துவங்க பணம் தேவை என சொல்கின்றனர். ரசிகர்கள் நினைத்தால் தந்துவிடுவார்கள். பணம் குறித்த பயம் இல்லை. ரசிகர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு கணக்கு வைக்க இந்த செயலி பயன்படும்’’ என்றார்.

‘‘சுவிஸ் வங்கியில் பணத்தை எடுக்க முயற்சிப்பேன். பணத்தை அங்கு போட மாட்டேன். இது ஆரம்ப கூட்டம் தான். இதுபோன்று இன்னும் 50 கூட்டங்களை நடத்த வேண்டும். 7ம் தேதி கேக் வெட்ட வேண்டியது இல்லை. கால்வாய்கள் வெட்ட வேண்டிய நேரம். பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் கமல்.