கார்த்திக் கட்சி பெயருக்கு தடை?

“தேர்தல் வரும் பின்னே கார்த்திக் கட்சி துவங்குவார் முன்னே” என்பது புதுமொழி.

பட வாய்ப்புகள் அருகிப்போகவே.. ஒதுங்கியிருந்த கார்த்திக் திடீரென 2006-ஆம் ஆண்டு லைம் லைட்டுக்கு வந்தார்.  அனைத்திந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு அதில் ஏதோ தகராறு ஏற்பட பார்வர்டு பிளாக் லெப்ட், ரைட் என்றெல்லாம் புது கட்சி துவக்கனார். அடுத்து நாடாளும் மக்கள் கட்சி என்று ஆரம்பித்தார். அந்தக் கட்சி என்ன ஆனது என்று தெரியவில்லை. இப்போது சில நாட்களுக்கு முன், மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத் துவங்குவதாக அறிவித்திருக்கிறார்.

மனித உரிமை என்ற பெயரை எந்தவொரு அமைப்புக்கும் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவே இருக்கிறது. நீதிமன்றங்களும் இது குறித்து உத்தரவிட்டிருக்கிறது.

மனித உரிமை  என்ற பெயரில் அமைப்பு துவங்கி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் சென்றது. இது பற்றி விசாரணை நடத்திய மனித உரிமை ஆணையம், தனியார் அமைப்புகள் மனித உரிமை பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட அரசு எந்த தனியார் அமைப்புகளும் மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. மேலும் இந்த பெயரை பயன்படுத்தும் அமைப்புகள் 2010 அக்டோபர் இறுதிக்குள் பெயரை மாற்றி பதிவு செய்ய வேண்டும் என்றும்,  பெயர் மாற்றப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் உத்திரவிட்டது.

இதற்கிடையே உச்சநீதிமன்றமும், “தனியார் எவரும் மனித உரிமை என்ற பெயரில் அமைப்பு நடத்தக்கூடாது” என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையும் மேற்கோள் காட்டி  2015ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

இப்படி இருக்கையில் “மனித உரிமை காக்கும் கட்சி” என்று கார்த்திக் தனது கட்சிக்குப் பெயர் வைத்திருப்பது சரிதானா? தவறென்றால் காவல்துறை, மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா? இந்தப் பெயரை தேர்தல் ஆணையம் ஏற்குமா?

ஆனால் கார்த்திக் ஒரு விளையாட்டுப்பிள்ளை. கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது  இந்திய நாடாளும் மக்கள் கட்சி  என்ற ஒன்றை நடத்தி வந்தார் கார்த்திக். தனது கட்சி 40 இடங்களில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். நாற்பது தொகுதிகள் மற்றும்  அதற்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார்.

இதல் காமெடி என்னவென்றால்.. ஏற்கெனவே மறுசீரமைப்பில் நீக்கப்பட்டிருந்த  சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும்  அவர் வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றருந்தன. அதாவது.. இல்லாத தொகுதிகளுக்கெல்லாம் வேட்பாளர்களை அறிவித்தார்.

இப்படி இவர் செய்த காமெடிகள் நிறைய உண்டு. அப்படித்தான் புதிய கட்சிப் பெயரையும் அறிவித்திருப்பார் போல!

ஆனால் சிலர், “சொசைட்டி ஆக்ட் படி, “மனித உரிமை” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி தனிப்பட்ட நபர்கள் பலர் அமைப்புகளை நடத்தி வந்தனர். அதற்குத்தான் அரசு தடை வித்தித்துள்ளது.

ஆனால் கட்சியை பதிவு செய்வது என்பது இந்திய தேர்தல் ஆணையத்தில்தான். ஆகவே இது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்” என்கிறார்கள்.