கருணாசுக்கு அவதூறு வழக்கில் ஜாமீன்: ஆனாலும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது…..

சென்னை:

சென்னையில் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து பேசியதற்காக கருணாஸ் மீது தொடரப் பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால், மேலும் பல வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் கருணாஸ் சிறையை விடடு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ், தமிழக முதல்வர் மற்றும், துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். இந்த வழக்கில், கடந்த 23ந்தேதி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கருணாசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கருணாஸ் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுமீதான விசாரணை நேற்று  நடைபெற்றது.

இந்த அவதூறு வழக்கில்,  கருணாசுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் கருணாஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ கருணாஸ், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்கள் மீதான விசாரணையும் இன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக அவர் சிறையில் இருந்து உடனடியாக வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.