விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்: திருப்பி அனுப்பிய காவல்துறை

னக்கு கொலை மிரட்டல் விடுவதாக நடிகர் விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரனை காவல்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. அந்நிகழ்ச்சியில் தனது அரசியல் ஆரவம் குறித்து பேசிய விஜய், ஊழல் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு குட்டிக்கதையையும் கூறினார்.

அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக ஏராளமானோர் சமூகவலைதளங்களில் கருத்திட்டனர்.

இந்த நிலையல் விஜய் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், “குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கருணாகரனின் அந்த ட்விட்டின் பின்னூட்டத்தில் ஆபாசமாகவும் மிரட்டலாகவும் விஜய் ரசிகர்கள் பலர் எழுதினர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக,  “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தைத் தெரிவிக்கிறது” என்று மீண்டும் ட்விட்டினார் கருணாகரன்.

இதற்கும் விஜய் ரசிகர்கள் பலர் தரக்குறைவாக கருணாகரனை விமர்சித்து பின்னூட்டம் இட்டனர். மேலும்  அவருக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ந்து கடுமையாக திட்டினர்.

தவிர, கருணாகரனின் செல்போன் எண்ணை சமூகவலைதளத்தில் பதிவிட்டு கருணாகரனுக்கு பாடம் புகட்டுங்கள் என்று விஜய் ரசிகர்கள் பதிவிட்டனர்.

இந்த நிலையில் கருணாகரன், “ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் வந்தன. அனைவரும் விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு என்னை ஆபாசமாக திட்டினர். கொலை செய்யப்போவதாக மிரட்டினர். இவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்போகிறேன்” என்று அறிவித்தார்.

அதே போல இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்தார்.

அவரிடம் எழுத்துப்பூர்வமான புகார் இல்லை. ஆகவே அதிகாரிகள், “எழுத்துப்பூர்வமாக புகார் எழுதி வாருங்கள். மேலும் எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் வந்தது என்பதையும் குறிப்பிட்டு எடுத்து வாருங்கள்” என்று சொல்லி திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து தகுந்த ஆதாரங்களோடு திரும்ப வந்து புகார் அளிப்பதாகக் கூறி நடிகர் கருணாகரன் திரும்பிச் சென்றார்.

கார்ட்டூன் கேலரி