கொலை மிரட்டல்!: விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் நடிகர் கருணாகரன் புகார்

டிகர் விஜய்யின் ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்நிகழ்வில் தனது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் கோடிட்டு காட்டினார். மேலும் ஊழல் குறித்து ஒரு குட்டக்கதையும் கூறினார்.

விஜய்யின் பேச்சு மற்றும் குட்டிக்கதை குறித்து  அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகறார்கள்.

இந்நிலையில் விஜயின் குட்டிக்கதையை மறைமுகமாக விமர்சனம் செய்த நடிகர் கருணாகரன், “குட்டி கதைகள் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? அறிவுரை கூறும் நடிகர்களின் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், விஜய் ரசிகர்கள், ட்விட்டரில் கருணாகரனை கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.  அதற்கு பிறகு கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதம் நடந்துவருகிறது.

விஜய் ரசிகர்கள் பலர் தரம்தாழ்ந்து கருணாகரனை விர்சித்து பின்னூட்டம் இட்டு வருகிறார்கள். இதனால் வருத்தமடைந்த கருணாகரன், “ரசிகர்கள் போடும் கமெண்டுகள் அந்த நடிகரின் தராதரத்தை விவரிக்கிறது.  ரசிகர்கள் செய்த காரியத்தால் விஜய்க்கு தான் கெட்டப் பெயர் ஏற்படுகிறது” என்று பதிவிட்டார்.

மேலும், “நான் தமிழகத்தை சேர்ந்தவனா என்று முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். சர்கார் தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா” என்றும் பதிவிட்டார்.

மேலும் “நீங்கள் (விஜய் ரசிகர்கள்) என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது #Gammunu” என்றும் கருணாகரன் பதிவிட்டுள்ளார். .

இந்த நிலையில் அவர், “இன்று மட்டும் விஜய் ரசிகர்கள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசி மூலம் எனக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். விஜய்க்கு எதிராக எந்த கருத்தையும் நான் பதிவிடவில்லை. விஜய் சொன்ன குட்டி கதை தொடர்பாகத்தான் கருத்து பதிவிட்டேன். எனக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நாளை புகார் கொடுக்கவுள்ளேன்” என்று கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி