மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

கடந்த நவம்பர் 8ம் தேதி, “500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து, மக்கள் நோட்டுக்காக திண்டாடி வருகிறார்கள்.
இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்தபோதும், ரஜினி உள்ளிட்ட சில திரைப்பட நட்சத்திரங்கள் வரவேற்றார்கள். இந்த நிலையில், “செல்லாது” அறிவிப்பை கடுமையாக எதிர்த்து பேசினார் நடிகர் மன்சூர் அலிகான்.
அவர், “100 ரூபாய் நோட்டை பிச்சையாக போட்ட காலம் மாறி தற்போது 100 ரூபாய் நோட்டிற்காக அனைவரும் வங்கியின் முன்பு நின்று பிச்சையெடுக்கும் அவல நிலை வந்து விட்டது , மழை பெய்தால் சாயம் போகும் நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டு உள்ளது. இதனை பிச்சைக்காரன் கூட வாங்க மறுப்பான். டூப்ளிகேட் நோட்டை போல் புதிய ரூபாய் நோட்டு உள்ளது.
இந்த திடீர் நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும் பணக்காரர்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற வங்கிமுன் வரிசையில் நிற்கவில்லை. தங்களின் பணத்தை டாலர்களாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகளும், ஏழை மக்களும் தான்.
இரவோடு இரவாக மோடி அறிவித்த இந்த திட்டம் தவறானது என்றும், ஏற்கனவே அறிவித்து இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்” என்று காட்டமாக விமர்சித்தார் மன்சூர் அலிகான்.
இந்த நிலையில், இன்று மாலை “செல்லாது” அறிவிப்பு குறித்து தனது கருத்துக்களை வெளியிட செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் மன்சூர் அலிகான்.
“பிரதமர் மோடியின் 500/1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நாட்டில் தொழில்கள் முடங்கிவிட்டன. குறிப்பாக, சினிமா தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதோடு முடிந்த படங்களை ரிலீஸ் செய்யமுடியாமல் இருக்கிறார்கள். இந்த திடீர் அறிவிப்பால் சுமார் 10 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 500/1000 ரூபாய் நோட்டுக்களை திரையரங்குகளில் வாங்க அனுமதிக்க வேண்டும். வங்கிகளுக்கு கொடுத்தது போல மார்ச் 31வரை திரையரங்குகளில் 500/1000 ரூபாய் வாங்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை நடக்கும் செய்தியாளர் சந்திப்பில், “செல்லாது” அறிவிப்பை எதிர்த்து போராட்டம் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் திரையுலகில் நிலவுகிறது.