மேகதாது: ரஜினி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்!: மன்சூர்அலிகான் அதிரடி குற்றச்சாட்டு

மேகதாது அணை விசயத்திலும் தமிழ்நாட்டுக்கு ரஜினி துரோகம் செய்கிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகள் உள்ள நிலையில், புதிதாக மேகதாது எனும் பகுதியில் அணை கட்ட, முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போதைய குமாரசாமி தலைமையிலான அரசு, அணை கட்டுவதில் தீவிரமாக இருக்கிறது.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இந்த புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்கி வைக்க முடியும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் வசதிக்காகவே இது கட்டப்பட  இருப்பதாக கர்நாடக அரசு கூறுகிறது.

ரஜினி – மன்சூர்

ஆனால், “தற்போதே தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை அளிக்காமல் கர்நாடகம் மோசடி செய்து வருகிறது. இந்த நிலையில்  மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு  ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது” என்று தமிழக விவசாயிகளும், அனைத்து அரசியல் கட்சிகளும் குரல்கொடுத்து வருகிறார்கள்.

தமிழக அரசும் இதே நிலைப்பாடு கொண்டுள்ளது.

இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. அத்துடன் அணை தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணை தொடர்பான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், “மேகதாதுவில் அணை கட்டுவதால், தமிழகத்துக்கு வரும் தண்ணீரில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது எந்த அளவுக்கு உண்மையென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து  patrikai.com  இதழிடம் பேசிய மன்சூர் அலிகான் தெரவித்ததாவது:

“ஏற்கெனவே  கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு பெரிய அணைகள் இருக்கின்றன. ஏராளமான தடுப்பணைகள் கட்டியிருக்கிறார்கள். இப்போதே தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ள காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக தருவதில்லை.

இதைத் தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் மேலும் ஒரு அணை கட்டினால் தமழகத்தின் நிலை என்ன ஆகும்?

தனது ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்ததாக தமிழர்களை ரஜினி பாடிப்புகழ்ந்தார். ஆனால் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் துரோகம் செய்கிறார்.

“அந்த அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு  கூறுகிறது. அது குறித்து ஆராய வேண்டும்” என்கிறார் ரஜினி.

மத்திய அரசு எந்த அளவுக்கு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பதை ரஜினி  அறியவில்லையா? கடந்த காலங்களிலும் அது.. காங்கிரசாக இருந்தாலும் பா.ஜ.க.வாக இருந்தாலும் மத்திய அரசு என்பது தமிழகத்துக்கு துரோகம்தானே செய்தார்கள்?

இந்த நிலையல் மத்திய அரசு சொல்வதை ஏன் ஆராய வேண்டும்?

அப்படி வைத்துக்கொண்டால் எதையும் ஆராயாமல்தான் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகள் மேகதாது அணையை எதிர்க்கிறார்களா? தமிழக கட்சிகள் ஆராயாமல்தான் மேகதாது அணை கூடாது என்று குரல் கொடுக்கிறார்களா?

இதையே ரஜினி, “மேகதாது அணை கட்டப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு என்று தமிழக அரசும், தமிழக விவசாயிகளும், கட்சிகளும் கூறுகின்றன. அது உண்மையா என்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்” என்றுகூட சொல்லியிருக்கலாமே!

ஆனால் அப்படிச்சொன்னால், கர்நாடகாவில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பும். ஆகவேதான் தமிழநாட்டிலேயே இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக பேசுகிறார். நாமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

அப்படியே எதிர்ப்பு வந்தாலும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு போட்டுக்கொள்வார். அவர் சொல்வதைக் கேட்கத்தான் மத்திய பாஜக இருக்கிறதே. அது பாதுகாப்பு அளிக்கும் என்று நம்புகிறார்.

ஆனால் தமிழர்கள்தான் இதையெல்லாம் சிந்திக்க வேண்டும். ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் கொடுத்தால் அவன் மூடன் அல்லவா? இனியாவது அப்படி இருக்கக்கூடாது!” என்று ஆவேசமாக சொல்லி முடித்தார் நடிகர் மன்சூர் அலிகான்.