விவசாயிகள் நலன் குறித்து கவலைப்படாமல் திப்பு சுல்தான், தாஜ்மஹால் வரலாற்றை தோண்டி எடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தி உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தனது சுற்றுலாத்தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை சமீபத்தில் நீக்கியது. தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படவில்லை என்று காரணம் சொன்னது.

தவிர ஷாஜஹான் இந்துகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும் பாஜக பிரமுகர்கள் சிலர் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடகாவில் நவம்பர் 10-ம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திப்பு சுல்தான் மாவீரர் என்பதை ஏற்க முடியாது என்றும் இந்து மற்றும்  கிறிஸ்துவர்களுக்கு எதிராக அவர் செயல்பட்டார் என்றும் கூறுகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டியுள்ளார்.

அதில், “ நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன.  விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு, சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு நிர்வாகம் மற்றும் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் திப்பு சுல்தான், தாஜ்மஹால் வரலாற்றை தோண்டி எடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று  தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் ஏற்கெனவே, தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டி விடுவோம் என்று பா.ஜ.கவை கண்டித்திருந்தார். அதே போல  பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து பாஜகவை கண்டித்து பதிவுகளை வெளியிட்டிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.