உள்நாட்டுப் புரட்சி – எழுந்து நில்: டில்லி மாணவர்களுக்கு ஆதரவு தரும் நடிகர் பிருத்விராஜ்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லி மாணவர்களின் போராட்டத்தை உள்நாட்டுப் புரட்சி என்றும், எப்போதுமே எழுந்து நிற்க வேண்டும் என்றும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, போதிய ஆதரவோடு நிறைவேற்றமும் செய்யப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு அச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் புறக்கணிப்படுவது போல, இஸ்லாமியர்களும் புறக்கணிக்கப்படுவதாகவும், குடியுரிமை சட்டத்தின் மூலம் உள்நாட்டு வாழ் இஸ்லாமியர்களுக்கே ஆபத்து என்றும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நேற்று மாலை போராட்டத்தில் தொடங்கினர். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த காவலர்கள், மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த காவலர்கள், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. கேரள மாநிலத்தில் ஆளும் கூட்டணியான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், எதிர்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, கேரள சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை மேற்கொண்டிருக்கும் நடிகர் பிருத்விராஜ், “Revolution is homegrown. Always. #Rise” என்று தெரிவித்துள்ளார். பிருத்விராஜின் இப்பதிவு டில்லி மாணவர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.