சென்னை: தெலுங்கர்கள் இல்லையென்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்? என்னை நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதே வீண் என சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார் நடிகர் ராதாரவி.

சிலருக்கு மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசிவிடுவார்கள். அப்படித்தான் இருக்கிறது ராதாரவியின் பேச்சும்.

தமிழக – தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அவ்விழாவில் கலந்துகொண்டுதான் இவ்வாறு பேசியுள்ளார் ராதாரவி.

அவர் பேசியதாவது, “தமிழக அமைச்சரவை அமைப்பதில் பெரும் தூணாக இருப்பது தெலுங்கு மக்கள்தான். தேனி முதல் திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகாசி வரை தெலுங்கர்கள்தான் போட்டியிடுகிறார்கள். கிருஷ்ணதேவராயர் இல்லையென்றால் மதுரை நகரம் வளர்ந்திருக்காது.

நாங்கள் எங்களை திராவிடர்களாக கருதுகிறோம். ஆனால், சிலர் எங்களை வேறு இனம் என்கிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் இரு தெலுங்கு முதல்வர்கள் மோடிக்கு ஆதரவாக இருப்பது நல்லது. தமிழகத்தில் அதிக கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக தெலுங்கர்கள்தான் உள்ளனர்.

கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தைக் கொடுத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ஆனால், அவரை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. ஒரு தெலுங்கருக்கான விழாவை இன்னொரு தெலுங்கன்தான் கொண்டாடுகிறான். இனிமேல் தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண்.

தமிழகம் நல்ல முதல்வரைப் பெற்றிருப்பதால் மாநிலத்தின் பொருளாதாரம் 8% உயர்ந்துள்ளது. தெலுங்ங்கு கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து முதல்வரை சந்தித்து தெலுங்கு இனத்தைக் காக்க கோரிக்கை வைக்கவுள்ளோம்.

தமிழகத்தில் தெலுங்கர்கள் இல்லையென்றால் ஒரு பகுதிக்கு வேட்பாளர்களே இருக்கமாட்டார்கள். தெலுங்கை யாரும் விலக்கி வைத்திட முடியாது” என்று பேசினார்.