கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி கலந்துகொள்கிறார்

தி.மு.க. முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியில் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்பார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

தி.மு.க.வின் தலைமையகமாக 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது அங்கு அறிஞர் அண்ணா சிலையை, மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது  சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி அங்கு இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புணரமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அண்ணா அறிவாலயத்தில் ஒரே இடத்தில், நாளை திறக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.  அகில இந்திய தலைவர்கள் பலர்  நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்வில் பங்கேற்க நடிகர்கள் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், நடிகர் ரஜினி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்   கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்தில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், சிலந்தி எனும் பகுதியில், “ஹூ ஈஸ் தி பிளாக் ஷூப் மே…. மே…. மே…. “ என்ற தலைப்பில் நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றை வைத்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ரஜினியின் உதவியாளர் முரசொலியை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்பட்டது. இந்நிலையில் முரசொலியில் குறிப்பிட்ட கட்டுரைக்காக வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கும் முன்பு கடந்த மார்ச் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. மண்டல மாநாட்டில், பேசிய லியோனி, “ரஜினி கட்சியே துவக்கவேயில்லை அதற்குள் 234 தொகுதிகளிலும் போட்டி என்கிறார். தொண்டர்களே இல்லாமல் கட்சியை ஆரம்பிக்கிறார்.” என்றெல்லாம் கடுமயைக பேசினார். அடுத்து பேசிய தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி,யும்  வீரபாண்டிய கட்டப்பொம்மன்  வசனத்தைப் பேசிவிட்டு, பின் அதை அப்படியே மாற்றி, “ ‘எங்களோடு நீட் போராட்டத்துக்கு வந்தாயா? ஜி.எஸ்.டி.யை எதிர்த்தாயா? தமிழனா, தன்மானம் உள்ளவனா? மானம் கெட்டவனே!” என்று மறைமுகமாக ரஜினியை விமர்சித்தார்.

இதையெல்லாம் மேடையில் இருந்த ஸ்டாலின் புன்சிரிப்புடன் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே கருணாநிதி உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோதும், பிறகு கருணாநிதி மறைந்தபோதும் ரஜினிக்கு உரிய மரியாதை தரவில்லை என்று ஒரு பேச்சு எழுந்தது.

ஆனால் சமீபத்தில் ரஜினிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கருணாநிதி சிலை திறப்ப விழாவில் ரஜினி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி