ரஜினி டி.வி. துவங்குகிறாரா.. க்யாரே செட்டிங்கா?

ஜினி பெயரில்  தொலைக்காட்சி ஒன்று துவங்க இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது அரசியல் பிரவேசத்துக்கு முதற்கட்ட முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த (2017ம்) வருடம் டிசம்பர் மாதம், சென்னையிலுள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பல கட்டங்களாக ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. பிறகு டிசம்பர் 31ஆம் தேதி, அரசியலில் ஈடுபடப்போவதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார்.  மேலும் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக அறிவித்து நிறைய உறுப்பினர்களைச் சேர்க்க உத்தரவிட்டார்.

அதே நேரம் கடந்த ஒருவருட காலமாக பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எந்தவித கருத்தும் வெளியிடாமல் இருந்தார். சிலவற்றில் அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையானது. மேலும் காலா, 2.0 திரைப்படங்களில் நடித்து வெளியிட்டார். அடுத்ததாக வரும் பொங்கல் அன்று பேட்ட படம் வெளியாகிறது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.  இதனால் அவரது ரசிகர்கள் சோர்ந்துபோய் இருக்கிறார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் கட்சி துவங்குவது எல்லாம் என்ன ஆனது என்று தங்களுக்குள் ஆதங்கப்பட்டுவருகிறார்கள்.

இந்த நிலையில் தனது பெயரில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். வணிக இலச்சினை பதிவு மையத்தின் பதிவாளருக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுதியதாக ஒரு கடிதம் நேற்று சமூகவலைதளங்களில் பரவியது. அக் கடிதத்தில், “தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்காக சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த வி.எம்.சுதாகர் என்பவரின் பெயரில் ‘சூப்பர் ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி’ ஆகிய பெயர்களை சொல்யூபில்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்தின் வர்த்தக முத்திரை வழக்கறிஞர் C.பிரகாஷ் பதிவு செய்திருக்கிறார்.

டிவியில் என்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை லோகோவிலும், லேபிளிலும் பயன்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இந்த விண்ணப்பத்தை அடுத்த கட்டத்துக்குப் பரிசீலிக்கலாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே அவர் அரசியலுக்கு வருதற்கு முன், டிவி துங்க இருப்பதாக ரசிகர் மன்ற வட்டாரத்தில் உற்சாகமாக பேசப்பட்டது. மேலும் சமீபத்தில் தந்தி டிவியில் தலைமை செய்தியாசிரியராக இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டேதான், இந்த புதிய டிவியில் பொறுப்பாளர் ஆகிறார் என்றும் பேசப்பட்டது. (ஏற்கெனவே இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது இருவருமே மறுத்தார்கள்.)

ஆனால் தற்போது வேறு ஒரு கருத்துபரவி வருகிறது.  “குறிப்பிட்ட அந்தக் கடிதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், தேதி குறிப்பிடப்படாமலும், ரஜினி மக்கள் மன்றத்தின் சீல் வைக்கப்படாமலும் வெளியாகி இருக்கிறது. ஆகவே இது செட்டிங் (கிராபிக்ஸ்) வேலையாக இருக்கலாம்” என்று ஒரு தகவல் உலவ ஆரம்பித்திருக்கிறது.