சென்னை:

ரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள  நடிகர் ரஜினிகாந்த் திடீரென நாளை இமயமலைக்கு பயணமாகிறார்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது  கூறிய, ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி தான் அரசியலுக்கு வருவேன் என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும்  கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கட்சிக்கான அடிப்படைகளை வேலைகளை தொடங்கிய அவர் நிர்வாகிகளையும் அறிவித்து வந்தார். கட்சிக்கு பேஸ் (அடித்தளம்) ஸ்டிராங்காக போட வேண்டியதிருப்பதார் சிறிது கால அவகாசம் தேவை என்று கூறிய ரஜினிகாந்த், சமீபத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்றும், தமிழகத்தில் தலைவர்கள் இல்லாமல் வெற்றிடம் நிலவுகிறது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினி நடித்துள்ள காலா படமும் முடிவடைந்த ஏப்ரல் 27ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  திடீரென இமயமலைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, உத்தராகண்ட்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு ஒருவார காலம் தங்குகிறார்.

இப்பயணத்தின்போது,  தனது முக்கிய ஆன்மிக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து அவர் ஆசி பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.