புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் சிம்பு புதிய யோசனை

--

ஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் சிம்பு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

கஜா புயல், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு, தனியார் அமைப்புகள், தனி நபர்கள் என்று பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனாலும் சேதம் மிக அதிகமாக இருப்பதால் உதவிகள் போதுமானதாக இல்லை.

புயல் வீசி ஒரு வாரம் ஆகியும் இன்னும் பல இடங்களில் அடிப்படை தேவைகளான உணவு, உடை, தண்ணீருக்கே மக்கள் அல்லாடும் நிலை.

இந்நிலையில், பிற மாவட்ட மக்கள்  உதவி செய்ய நடிகர் சிம்பு ஒரு புதிய யோசனையை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சிம்பு பேசிய வீடியோ பதிவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், சிம்பு தெரிவிப்பதாவது:

“டெல்டாவில் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியும். மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்னால், முடிந்த உதவியை நான் செய்து விடுவேன். என்னுடைய ரசிகர்களும் களத்தில் உதவி செய்து வருகிறார்கள். இதுதவிர,  தமிழகத்தில் நிறைய பேர், நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற பிரச்னைகள் வரும் போது, நாம் ஏதேனும் ஒரு உதவி செய்ய வேண்டுமென நினைக்கிறோம். ஆனால், நாம் கொடுக்கும்  பணம், செய்கின்ற உதவிகள், சென்று சேர்கிறதா, கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு பயன்படுகிறதா என்பது தெளிவாக தெரிவதில்லை. இது ஒரு பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

நான் கொடுக்கணும்னு நினைக்கிறதை முதல்வரிடம் சென்று கொடுக்க முடிகிறது. ஆனால், ஒரு பாமரன் 10 ரூபாய் கொடுக்கனும்னு நினைக்கும் போது, அதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், தமிழ்நாட்டு மக்கள் இணைந்து செயல்படுவதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றியது

அதாவது, நாம் எல்லோரும் செல்போன் பயன்படுத்துகிறோம். ஒரு காலர் ட்யூனுக்கு 10 ரூபாய் பயன்படுத்துகிறோம். டேட்டா வேண்டுமென்றால் மெஜேஜ் அனுப்புகிறோம். நிகழ்ச்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் மிஸ்ட் கால் கொடுக்கிறோம். அதுபோல், இந்த செல்போன் நெட்வொர்க் மூலம் பணம் கொடுக்க வழி இருக்கிறது.

எல்லா நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட்டு, யார் யார் எந்தப் பெயரில் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலுடன் அரசுக்கு பணத்தை கொடுக்கலாம். இதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த யோசனை சரி என்று தோன்றினால், #uniteforhumanity #unitefordelta என்று போட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு போய் சேர்க்கலாம்”  என்று சிம்பு கூறியுள்ளார்.

 

#ActorSimbu #newidea #stormvictims