சிவாஜி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு

சென்னை:

டிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 1 மாதமாக நடைபெற்று வருகிறது. தினசரி பல்வேறு துறை மானிய கோரிக்கைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொருநாளும் சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சரமாரியாக அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரத்தை தொடர்ந்து விதி 110ன் கீழ்  பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  அக். 1-ந்தேதி  நடிகர் சிவாஜி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

மேலும், செப்.14ந்தேதி  ராமசாமி படையாச்சியின் பிறந்த நாளும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளார்.

பல்வேறு சர்சைசைகளுக்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 1ந்தேதி, அடையாறில் அமைக்கப்பட்டுள்ள   நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மனிமண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்த நிலையில், தற்போது சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

தமிழக திரை உலகின் மூடிசூடா மன்னனா நடிகர்  சிவாஜி கணேசன் கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் மணி மண்டபம் கட்டப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது செயல்படுத்த படாத நிலையில், தமிழக அரசு சார்பில் கட்டப்படும் என்று  கடந்த  2015ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி சட்டசபையில் அப்போதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பின்னர் சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜிகணேசனின் முழு உருவ வெண்கலச்சிலை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில், அங்கிருந்து அகற்றப்பட்டு மணி மண்டபத்திற்குள் நிறுவப்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு மணி மண்டபம் திறக்கப்பட்டது.