அனு எனற பெண் புலியை தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்ற பெண் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

anu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவக்கார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சீமராஜா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் மற்றும் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து அனு என்ற வெள்ளை நிற பெண் புலியை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சிவகார்த்திகேயன் உயிரியல் பூங்கா இயக்குனர் எஸ்.யுவராஜ்ஜிடம் கொடுத்துள்ளார். மேலும், தத்தெடுக்கும் நிகழ்ச்சிக்காக ரூ.2.12 லட்சம் தொகையையும் அளித்துள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், ” விலங்குகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை. 174 வகை இனங்களில் ஒன்றை தத்தெடுக்க பொதுமக்கள் தாமாக முன் வரவேண்டும் “ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இத்தகைய செயல் குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கும்போது, “ தத்தெடுக்கும் நிகழ்ச்சியின் மூலம், இங்கிருந்து யாராலும் விலங்குகளை தத்தெடுக்க முடியும். மேலும், விலங்கு, பறவை, ஊர்வனவை என்று ஏதாவது ஒன்றை தத்தெடுப்பதன் மூலம் பூங்காவில் தினந்தோறும் நடக்கும் தூய்மைப்படுத்துதல் மற்றும் பாலூட்டுதல் போன்றவற்றில் பங்கேற்க முடியும் ” என்று தெரிவித்தனர்.

விலங்குகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நாள் உணவுக்கட்டணம் செலுத்துவதன் மூலம் விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை தத்தெடுக்க முடியும். உதாரணமாக, ஒரு நாளைக்கு சிங்கம் அல்லது புலிக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.1,196 செலவழிக்கப்படுகிறது. இதுவே, மனித குரங்கிற்கு ரூ.550 வரை ஒரு நாளைக்கு செலவழிக்கப்படுகிறது. இந்த தொகையை தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டால் அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை பாதுகாக்க முடியும் என உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.