கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்!

‘காக்கும் கரங்கள்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அனைவராலும் புகழப்படுபவர். பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சிவகுமார், சென்னையில் முதல் முறையாக தி.நகர் பகுதியில் தனக்கான வீட்டைக் கட்டினார். கடந்த 40 வருடங்களாக அந்த வீட்டில்தான் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.

இவரின் பிள்ளைகளாக சூர்யா, கார்த்தி, பிருந்தா இந்த வீட்டில்தான் பிறந்தார்கள். தன் பேரப் பிள்ளைகளையும் இந்த வீட்டில் தான் கொஞ்சி மகிழ்ந்தார். இன்று தன் மகன் சூர்யாவுக்காக அவர் வசித்த வீட்டை விட்டுக்கொடுத்துள்ளார் சிவகுமார்.

சிவகுமார் குடும்பம் இருந்த வீடு வசிக்கப் போதுமானதாக தற்போது இல்லாததால், சூர்யா தாங்கள் இருந்த இடத்துக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு வீடு கட்டினார்.
இதற்கு தன் அம்மாவின் பெயரான ‘லஷ்மி இல்லம்’ என்று பெயரிட்டார்.

இனி சிவகுமாரின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் லஷ்மி இல்லத்துக்குச் செல்வதால், இத்தனை நாள்களாக அவர்கள் வசித்து வந்த வீட்டை விற்க சிவகுமாருக்கு மனமில்லை. எனவே, எல்லோரும் கல்வி கற்பதற்கு உதவியாக அகரம் பவுண்டேஷன் செயல்பாட்டுக்கு அந்த இல்லத்தைக் கொடுத்துள்ளார். சிவகுமாரின் இந்த முடிவை திரையுலகப் பிரமுகர்கள் வரவேற்றுள்ளனர்!