கொச்சி:

கேரளாவின் எர்ணாகுளத்தில் சிக்கித் தவித்த  150 புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடிகர் சோனு சூத் உதவியுள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ளது கைடெக்ஸ் ஜவுளி தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில், ஒடிசா  மாநிலத்தைச் சேர்ந்த 150 பெண்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா  ஊரடங்கு காரணமாக,  ஊர் திரும்ப முடிவு செய்த இந்தப் பெண்கள், தங்கள்  பார்த்து வந்த பணியை ராஜினாமா செய்து விட்டனர். இந்நிலையில், அவர்கள் சொந்த ஊர் திரும்பு உடனடியாக சிறப்பு ரயில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து கையில் பணம் இல்லாத நிலையில்  ஊர்  திரும்ப முடியாமல் கடந்த ஒரு வாரக் காலமாக அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இவர்களது நிலைக் குறித்து கேள்விப்பட்ட நடிகர் சோனு சூத்,  இவர்களுக்கு உதவ முன்வந்தார்.  இவர், இந்த பெண்கள் ஒடிசா திரும்ப தனியார் விமானம் ஒன்றை ஏற்படுத்தி கொடுத்தார். இந்த விமானத்தில் இன்று காலை 8 மணிக்கு 150 பெண்களுடன் கொச்சி விமான நிலையத்தில் கிளம்பியது. இந்த விமானம் காலை 10.30 ஒடிசா சென்றடைந்தது.

இதுமட்டுமின்றி, அவர் மும்பையில் உள்ள தனது ஹோட்டலை சுகாதாரப் பணியாளர்களுக்காக வழங்கினார். வறியவர்களுக்கு உணவு விநியோகித்தார், ரம்ஜான் காலத்தில் 25,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு உணவளித்தார்.

மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் வரை தான் இந்த வேலையைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைவதைக் காண்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்றும் நடிகர் சோனு தெரிவித்தார்.

அனைத்து தொழிலாளர்களும் வீட்டிற்கு வரும் வரை நான் சாலைகளில் இருப்பேன். அது எடுக்கும் கடின உழைப்பு குறித்து எனக்கு அக்கறை இல்லை, அவர்களை அவர்களது குடும்பங்களுக்கு அனுப்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது தொலைப்பேசி தொடர்ந்து ஒலிக்கிறது, எனது சமூக ஊடக கணக்குகள் செய்திகளால் நிரம்பி வழிகின்றன. முடிந்தவரை அனைவரையும் சென்றடைய முயற்சிக்கிறேன், என்றும் நடிகர் கூறினார்.

அவரை என்ன முன்முயற்சி எடுக்க வைத்தது என்று கேட்கப்பட்ட போது, புலம்பெயர்ந்தவர்கள் இல்லாமல் நாடு செயல்பட முடியாது என்றும், எனவே அவர்களை வீட்டிற்கு அனுப்புவது தனது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

“எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது, ஆனால் நான் அவ்வாறு செய்ய உறுதியாக இருந்தேன். நான் அவர்களின் பயணங்களுக்கு ஒருங்கிணைந்து, வெவ்வேறு மாநிலங்களிலிருந்து அனுமதி பெற்றேன், ”என்று சோனு மேலும் கூறினார்.