டில்லி:

பிரபல பாலிவுட் நடிகரான சன்னிதியோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக  பாஜகவில் இணைந்தார்.

பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் இன்று மத்திய பாஜக அமைச்சர்கள்  நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

ஏற்கனவே தர்மேந்திராவின் மனைவியும், சன்னி தியோலின் சித்தியுமான ஹேமமாலினி மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நிலையில், தற்போது சன்னிதியோலும் பாஜகவில் இணைந்துள்ளார். அவர் குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பாஜகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சன்னி தியோல்,  என்னுடைய தந்தை தர்மேந்திரா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நெருக்கமாக இருந்தவர். அதனால், நான் இப்போது மோடிஜியுடன் இணைந்துவிட்டேன்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி தேவை. நான் அதிகம் பேச விரும்பவில்லை. செயலில் காட்ட விரும்புகிறேன் என கூறினார்.