குணசித்திர நடிகரும், இசையமைப்பாளருமான டி.எஸ். ராகவேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 75 கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் 2 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது என நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைதேகி காத்திருந்தால், சிந்து பைரவி, சின்ன தம்பி, பெரிய தம்பி, விக்ரம், அண்ணா நகர் முதல் தெரு, ஹரிசந்திரா, வாய் கொழுப்பு உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் .

இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். 1980-இல் வெளிவந்த யாக சாலை என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இவர் ஒரு பாடகரும் கூட .அழகு மலராட பாடலில் ஜதி சொல்லுவதில் இருந்து, வருஷம் 16 படத்தில் வரும் ஏய் அய்யாச்சாமி உள்ளிட்ட பாடலை பாடியுள்ளார்.

பிண்ணனி பாடகி சுலோச்சனாவை திருமணம் செய்து கொண்டார். போடா போடா புண்ணாக்கு, திருப்பாச்சி அருவாள, லாலா நந்தலால உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி கல்பனா, ராகவேந்திராவுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.