சென்னை: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அவரது அரசியல் அறிவிப்புக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசியல் மற்றும் மத்தியஅரசு குறித்து அவ்வப்போது திரைப்பட நிகழ்வுகளில்  பஞ்ச டயலாக்குகளை அவிழ்த்து விடும் நடிகர் விஜய், தனது படத்திலும் அரசியல் வசனங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்துவதில் அக்கறை கொண்டவர். இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எந்தவித அறிவிப்பும் செய்யாமல், மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மூலம் மக்கள் பணி செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிகில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய்,  அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால், விளையாட்டில் அரசியல் வேண்டாம் எனவும், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்க உட்கார வைத்தீர்கள் என்றால், அனைத்தும் சரியாக இருக்கும் எனவும் விஜய் சூசகமாக கூறினார். அவரது எகருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளையும் அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல்  இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் பேரம் நடைபெற்று வருகின்றன. பல திரையுலக பிரமுகர்கள் அரசியல் கட்சிகள் இணைந்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்தவாரம் செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தை  தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் ,  அது எந்த நேரத்திலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை நினைவில்கொண்டு, மாணவரணி, இளைஞரணி, தொண்டரணி நிர்வாகிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா?

ஏற்கனவே  திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும்,  தொடர்ந்து, கன்னியாகுமரி , கடலூர், ராணிப்பேட்டை,  திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாகவும், அதுமட்டுமின்றி  மகாராஷ்டிரா மாநில விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்துகள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த ஆலோசனையின்போது, அவரது ரசிகர்கள், நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஆனால், விஜய்  தனது மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து விவாதித்து வருவது தமிழக அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அவர் தனிக்கட்சித் தொடங்குவாரா அல்லது தேர்தல் சமயத்தில் ஏதாவது ஒருகட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்பது குறித்து சமுக வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் போல அடித்தளம் அமைப்பதாக கூ…………றிக்கொண்டே காலத்தை கடந்து செல்வாரா என்பது போகப்போகத்தான் தெரிய வரும்… என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
கட்டுரையாளர்:  ATSPandian