சென்னை:

டிகர் சங்க தேர்தல் ரத்து செய்த சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீது ஓரிரு நாளில்  விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடிகர் சங்க தேர்தல், காலதாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்ன உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த ஆண்டு (2019)  ஜூன் மாதம் 23ந்தேதி  தேர்தல் நடைபெற்றது. இந்த   தேர்தலில்  நாசர், விஷால் தலைமையிலான  பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டி யிட்டன. தேர்தலில்,  தபால் வாக்குகளைச் செலுத்த அனுமதிக்கவில்லை என்று கூறி, பாக்யராஜ் அணியைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

இந்த வழக்கை விசாரித்து வந்த தனி நீதி நீதிபதி கல்யாணசுந்தரம், ஜனவரி 24ந்தேதி ,  தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக் காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது என கூறியிருந்தார்.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்களின் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகளே நிர்வகித்து வருகின்றனர், ஏற்கனவே இதுபோல தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படாமல், பதவிக்காலம் முடிந்த பிறகும், முந்தைய நிர்வாகிகளே  சங்கத்தை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனால், தற்போது, தமிழக அரசு நடிகர் சங்கப் பிரச்சனையில், நடுநிலையோடு நடந்து கொள்ளாமல்,  ஒருதரப்பு  சார்பாக நடந்து கொண்டு வருகிறது, இந்த விவகாரத்தில், தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து,  மீண்டும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இந்த வழக்கு  வரும் 12ந்தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.