அரசியல் கட்சிக்கு அச்சாரமா? ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நடிகர் விஷால்

சென்னை:

டிகர் விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் மக்கள் நல இயக்கமாக மாற்றி இருக்கிறார்.  இதன் காரணமாக அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி களம் புகுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.  அவ்வப்போது அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நடிகர் விஷால் தனது பிறந்தநாளான இன்று, ரசிகர் மன்றங்களை மக்கள் நல மன்றங்களாக மாற்றி அறிவித்து உள்ளார்.

விஷால் நடித்த வெற்றிப்படமான இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழாவும்,  நடிகர் விஷாலின் பிறந்தநாளை விழாவையும்  சேர்த்து சென்னை கலைவாணர்  விழா கொண்டாடப்பட்டது.

இதில் விஷால், இயக்குனர் மித்ரன், நடிகை சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.  இந்த விழாவில்  ரசிகர் மன்றத்தை ‘மக்கள் நல இயக்கம்’ ஆக மாற்றியும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதில் விவேகம், வித்தியாசம், விடா முயற்சி எனவும், அணி சேர்வோம் அன்பை விதைப்போம் என்று அதில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விஷால் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று நம்பப்படுகிறது.

விஷாலின் இந்த திடீர் நடவடிக்கை திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.