ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷால் மனு மீண்டும் நிராகரிப்பு

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன.

மொத்தம்145 வேட்பு மனுக்களில் 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் நேற்று நள்ளிரவு செய்திகள் வெளியாயின.

அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

 

நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் இருவர் தாங்கள் கையெழுத்திட வில்லை என மறுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்கள், தவறான குடியிருப்பு முகவரி உள்ளிட்ட காரணங்களால் மனு நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி அறிவித்தார்.

நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு காரணம் கேட்டு நடிகர் விஷால் போராட்டம் நடத்தினார். மேலும், அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் வேட்பு மனு  மீண்டும் பரிசீலனைக்கு ஏற்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

 

 

ஆனால், நடிகர் விஷால் தரப்பினர், தனது மனு ஏற்கப்பட்டதாகவும், நீதி வென்றது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே நேரத்தில் தீபாவும் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்டறிய தேர்தல் அலுவலகம் வந்திருந்தார். அப்போது அதிமுகவினருக்கும், அவரது தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நள்ளிரவு மீண்டும் நடைபெற்ற பரிசீலனை அடிப்படையில், விஷாலின் வேட்பு மனுவை  மீண்டும்  நிராகரிப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.