சென்னை: நடிகர் விவேக் மறைவுக்கு திமுக எம்பி. கனிமொழி, கமல், ரஜினி, உதயநிதி, எல்.முருகன் உள்பட அரசியல் கட்சியினர், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.பி., கனிமொழி

‘நடிகர் பத்மஸ்ரீ. விவேக் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர்  கமல் ஹாசன்

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.

நடிகர் ரஜினிகாந்த் 

சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் ‘.

உதயநிதி ஸ்டாலின்,

‘’அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். ‘மனிதன்’ படத்தில் என்னுடன் நடித்தார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து

விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து. கலைச் சரித்திரம் சொல்லும் நீ ‘காமெடி’க் கதாநாயகன் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் வைரமுத்து.

 தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன்

சமூகச் சிந்தனையோடு, சீர்திருத்தக் கருத்துக்களையும் தன்னுடைய நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, இயற்கை நலனில் ஆர்வம் கொண்ட, ‘சின்னக் கலைவாணர்’ என்று அழைக்கப்படும், பத்மஶ்ரீ நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

என்ற செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கின்றது. மரங்களின் காவலர், மனித நேயப் பண்பாளர், கலைப்பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்ற அவரது இழப்பு, திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. தனிப்பட்ட முறையில் நல்லதொரு நண்பரை இழந்த, பெரு வலி எனக்கு. அவரை இழந்து வாடுகின்ற குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் என்று தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் எல்..முருகன்

”மக்களின் அன்புக்குரிய, மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தன் நடிப்பின் மூலம் நகைச்சுவையாக கொண்டு சேர்ப்பதில் சிறந்த நடிகராக விளங்கிய நடிகர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி என்னை ஆற்றொன்னா துயரத்தில் ஆழ்த்திவிட்டது .

அவர்களை இழந்து வாடும் அவரது ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!ஓம் சாந்தி!”என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை.

‘ஒரு நடிகரை விட, சின்னா கலைவாணர் விவேக் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார், அவர் மிகவும் முற்போக்கான எண்ணங்களை வெளிப்படுத்த சினிமாவின் சக்திவாய்ந்த ஊடகத்தை நுட்பமாக பயன்படுத்தினார். அவர் தனது கடைசி தசாப்தத்தை பசுமை கலாம் திட்டத்திற்கு ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு அர்ப்பணித்தார். அவர் நம்மீது மிக ஆழமான முத்திரையை வைத்திருந்தார்! ஓம் சாந்தி”.

கம்யூனிஸ்டு தலைவர் இரா.முத்தரசன்

நடிகர் விவேக் பகுத்தறிவு சிந்தனைக்கு வெள்ளித்திரையில் லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரணம் கலைஞர் என நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் புகழாரம் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர், ஜி.கே.வாசன்

“திரைப்படத் துறையினராலும் தமிழ் மக்களாலும் ‘சின்னக் கலைவாணர்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். தனது சிறந்த நடிப்பாலும், உயர்ந்த பண்பாலும் திரைத்துறையை கடந்து அனைத்து மக்களின் அன்பையும் பெற்றவர். மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் நின்று சுற்றுச்சூழலின் தூய்மைக்காக தன்னை அர்ப்பணித்து கடமையாற்றியவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது மற்றும் தமிழக அரசின் திரைப்பட துறைகளில் பல விருதுகளை பெற்றவர். அவரது மரணம் திரைப்படத் துறைக்கும் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கும் திரைப்பட துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்”.‘

நடிகர் சூர்யா

மறைந்த விவேக் உடலுக்கு  நடிகர் சூர்யா காலை நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, தங்மபி  நடிகர் கார்த்தியுடன் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினர். “இதனை தொடர்ந்து சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார். மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி

எப்பவுமே நீங்க எனக்கு Hero தான் இரங்கல் லெஜண்ட் ” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சவை நடிகர், கவிஞர், எழுத்தாளர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் விவேக்(59). திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். அப்துல் கலாமின் தீவிர ஆதரவாளராக விவேக் தன் வாழ்நாளில் 1 கோடி மரக்கன்றுகள் நடுவேன் என்ற லட்சியத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவரை 33.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டியிருந்தபோதே காலம் எனும் கொடிய நோய் அழைத்துச் சென்றுவிட்டது. அவரின் மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் உருக்கமான இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில்,  வார்த்தைகளால் விவேக் மறைவிற்கு ஆறுதல் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

நடிகர் விக்ரம் 

என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு.அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.