நடிகர் விவேக்கின் உடல் தகனம்: பூவுலகை விட்டு விண்ணுலகம் சென்றார் விவேக்….

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் உடல் மின்மயானத்தில் காவல்துறை பாதுகாப்புடன் இன்று மாலை  தகனம் செய்யப்பட்டது. அவரது மகள் இறுதிச்சடங்கு செய்து எரியூட்டினார்.

நகைச்சுவை நடிகர்  மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியில்  உள்ள  சிம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டதுடன்,  எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

‘இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து , விவேக் உடல் அலங்கரிக்கப்பட்ட வேனில், மாலை 4 மணி அளவில், விருகம்பாக்கத்தில்  உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.  இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விவேக்குக்கு கவுரவம் தெரிவிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்கு, காவல்துறை மரியாதை செலுத்தியது.  மேட்டுக்குப்பம் மின் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின் காவல்துறையினரின் 2 நிமிட மௌன அஞ்சலிக்கு பின்,  இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார்.  பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.