கூண்டோடு கலைகிறது நடிகர் சங்கம்?

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் எடுத்த முடிவை தொடர்ந்து அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது. அவர் தலைவர் பொறுப்பு வகிக்கும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நேற்று பொதுக் குழு கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு ரகளை நடந்தது.

இதை தொடர்ந்து நடிகர் சங்கத்திலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. விஷால் நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர் பதவியை ராஜினாமா செய்யும்படி விஷாலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைதொடர்ந்து நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்து விஷாலுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். வரிவான ராஜினாமா கடிதத்தை அவர் சமர்பித்துள்ளார்.

கடந்த 4ம் தேதி இந்தக் கடிதம் எழுதப்பட்டது. பொன்வண்ணனின் ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை காரணம் காட்டி ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி பொன்வண்ணனை வலியுறுத்தி வருகிறார் நாசர்.

இதை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் தனது நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் சங்கம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாக திரைப்படத் துறையினர் தெரிவித்துள்ளனர்.