கருணாநிதி உடல்நிலை: நடிகர் சிவகுமார், சூர்யா நேரில் நலம் விசாரிப்பு

சென்னை:

டல் நலமில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா  கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

ரத்தம் குறைவு, சிறுநீரக தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு இன்று 3வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர்  கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவியதால், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் திரண்டுள்ளனர்.

கருணாநிதியை காண கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, திரையுலகத்தினர் நலம் விசாரித்து வருகின்றனர்.

இன்று காலை , திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, தமிழக முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். அதுபோல, வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்களும்  காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்து சென்றனர்.

இந்த நிலையில், பிரபல தமிழ் நடிகரான சிவகுமார் மற்றும் அவரது மகன் நடிகர் சூர்யா ஆகியோர் காவேரி மருத்துவமனை வந்து ஸ்டாலின் உள்பட திமுக குடும்பத்தினரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், அந்த பகுதி முழுவதும், பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. காவேரி மருத்துவமனை முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.