2019 தேர்தல்: சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களை வேட்பாளர்களாக நிறுத்த பாஜக திட்டம்

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது. தற்போது பதவியில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் உள்பட பல எம்.பி.க்களுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடையாது என்று பாஜக தெரிவித்துள்ளது. ஆட்சியை மீண்டும் தக்க வைக்க பாஜக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

2014ம் ஆண்டு வெற்றி பெற்ற தொகுதிகளை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்றி வருகிறது. மேலும், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பாஜக.வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதை ஈடுகட்ட பாஜக மெகா திட்டம் ஒன்று தீட்டியுள்ளது.

வரும் தேர்தலில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள், இளம் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பத்மபூஷன் விருது பெற்றவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. பாடகர்கள் மனோஜ் திவாரி, பாபுல் சுப்ரியோ, நடிகர்கள் பரேஷ் ராவல், கிரன் கெர், ஒலிம்பிக் தூப்பாக்கி சுடும் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பத்திரிக்கையாளர் பிரதாப் சிம்கா, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்கே சிங், முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், முன்னாள் அதிகாரி யுதித் ராஜ் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இது போன்ற பிரபலங்களை வேட்பாளர்களாக நிறுத்துவதன் மூலம் கட்சிக்கு ஒரு இமேஜை ஏற்படுத்தி அதிக இடங்களில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது. நடிகர் அக்சய் குமார் பஞ்சாப் அல்லது டில்லியிலும், அனுபம் கெர் டில்லியிலும், நானா படேகர் மகாராஷ்டிராவிலும் களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதேபோன்ற நடவடிக்கையை இதர கட்சிகளும் கடந்த காலங்களில் செயல்படுத்திய வரலாறு உள்ளது. அமிதாபச்சன் காங்கிரஸ் சார்பில் அலகாபாத் தொகுதியில போட்டியிட்டார். ஆனால் அவரது அரசியல் வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது. நடிகர் கோவிந்தா, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் போன்றவர்களும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.