நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! நீதிபதியே தொடர்ந்தார்

சென்னை:

டிகர் சங்க தேர்தல் பிரச்சினை நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முயன்றதாக  ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியே தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று முன்தினம் (ஞாயிற்றுகிழமை) மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில்  நடந்து முடிந்தது.

இந்தத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் தலையீடு செய்ய முயன்றதாக ஐசரி கணேஷ் மீது நிதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள ஆணையில், நான் பணி நிமித்தமாக வேலூர் சென்றிருந்தேன். அப்போது எனக்கு உயர்நீதிமன்ற பதிவாளர் தொலைபேசியில் அழைத்து என்னுடைய வீட்டில் மாலை 5 மணிக்கு நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறினார். இதனையடுத்து நான் சென்னைக்கு திரும்பினேன். அப்போது சரியாக மாலை 4.20 மணியளவில் அனந்தராமன் என்பவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். அத்துடன் அவர் நடிகர் சங்க தேர்தல் வழக்கை வரும் ஜூன் 23ஆம் தேதி வரை ஒத்திவைக்க கூறினார். ஏனென்றால் ஐசரி கணேஷ் அவருக்கு மிகவும் வேண்டியவராவர். அவர் இந்த நடிகர் சங்க தேர்தல் சம்பந்தப் பட்டுள்ளதால் இதனைத் தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு நான் எதுவும் கூறாமல் தொலைப் பேசி அழைப்பை துண்டித்து விட்டேன்.

அதற்குபின் மீண்டும் 4.45 மணியளவில் மீண்டும் என்னை வந்த சந்தித்த அனந்தராமன் தேர்தலை 2 அல்லது 3 வாரம் தள்ளிவைக்கும்படி ஆணையிடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் மீண்டும் முடியாது என்று கூறி அவரை அங்கு கிளம்பும் படி அறிவுறுத்தினேன். இதன்பின்னர் அனந்தராமன் என்னுடைய வீட்டிலிருந்துதான் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை எனது மனைவியின் மூலம் அறிந்துகொண்டேன். இதனையடுத்து அவர்கள் என்னுடைய வழக்கு விசாரணையில் தலையீட முயன்றார்கள் என்று தெளிவாக உணர்ந்தேன். எனவே இவர்கள் இருவர் மீது நானே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளேன்  எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதியே ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.