‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ திட்டத்தின் விளம்பரத் தூதராக நடிகர் விவேக், சூர்யா..! 

சென்னை:

மிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விளம்பர தூதரர்களாக நடிகர் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான விழிப்புணர்வு  பிரச்சார தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகர் விவேக் பங்கேற்றார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பிளாஸ்டிக்  பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கில்  மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில்,  ஒரு வலைத்தளம் இன்று தொடங்கப்பட்டது. இந்த வலைதளத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்து பேசிய எடப்பாடி, “தமிழகத் தில் பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு பரப்புரை விளம்பர தூதராக நடிகர் விவேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விவேக்கைத் தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட உள்ளனர். அவர்கள் ஷூட்டிங் இருக்கும் காரணத்தால் இன்று வர முடியவில்லை என்றார்.

மேலும், முதற்கட்டமாக ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தால் ஆரோக்கியமான வாழ்வு அமையும். தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என பேசினார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றுப்பொருட்களாக பயன்படுத்தப் பட இருக்கும் பொருட்களையும் முதலமைச்சர் அறிமுகம் செய்தார். பிளாஸ்டிக் தீமைகளை விளக்கும் வகையிலான இணையதளம் மற்றும் செயலியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த குறும்படம், லோகோ, ஆகியவை வெளியிடப்பட்டன.