இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபால் பாலியல் புகார்

திருட்டுப் பயலே-2 படத்தின் படப்பிடிப்பின்போது, இயக்குனர் சுசி கணேசன்தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை அமலாபால் புகார் தெரிவித்துள்ளார்.

மீ டூ ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் பலரும் சமூகவலைதளங்களல் பதிந்து வருகிறார்கள்.

இதில் இந்தியாவின் பல மத்திய முன்னாள் அமைச்சர் அக்பர், பிரபல இந்தி நடிகர் நானே படேகர் உட்பட பல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திரைப்பாடலாசரியர் வைரமுத்து அதிகமான புகார்களை எதிர்கொண்டு வருகிறார். மேலும் நடிகர்கள் ராதாரவி, சிம்பு, கர்நாடக இசைப்பாடகர்கள் டி.என்.சேசகோபாலன், ரவிகிரண், சசிகிரண், பிராமணர் சங்க தலைவர் நாராயணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் சுசிகணேசன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கவிஞர் லீனா  மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்,

தற்போது  அவரது பாலியல் புகாரில் உண்மை இருக்கக்கூடும் என்றும் சுசி கணேசன் தன்னையும் பாலியல் ரீதீயாக சீண்டினார் என்றும் பிரபல நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள    அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம், அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பார் என்பது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சுசி கணேசன் இயக்கிய திருட்டுப்பயலே 2 படத்தின் நாயகியாக நான் நடித்தேன். அப்போது அவரின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்திருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்பதை நான் அறிவேன்.

இந்தக் கொடுமையை, சமூக வலைத்தளங்கள் மூலம் லீனா வெளியில் சொல்லியிருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இன்றைய பொருளாதார நிலையும், பெருகிவரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை எளிய இரையாக்கி விடுகிறது. அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது.

தங்களது மனைவியையும் மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையைச் செலுத்துவது துரதிஷ்டவசமானது.

பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்” என்று அமலாபால் தெரிவித்துள்ளார்.

அமலா பாலுக்கு பதில் அளித்த லீனா மணிமேகலை, “நான் சுசி கணேசனுடன் இணைந்து பணியாற்றவில்லை. 2005ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் போது பேட்டிக்காக அவரை சந்தித்தேன். நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்குரலுக்கு நன்றி. உங்களுக்கு நடந்த செயலுக்காக நான் வருந்துகிறேன். இந்தப் போராட்டத்தில் நாம் இணைந்தே பணியாற்றுவோம்” என்று லீனா தெரிவித்துள்ளார்