Random image

ஆபத்தான மன அழுத்த நோய்கள்:   நடிகை சந்தியா சொல்வதைக் கேளுங்க!

திரைப்பிரபலங்கள் பலர் மீ டூ விவகாரத்தில் தீவிர அக்கறைகாட்டி வரும் நேரத்தில் இன்னொரு முக்கிய பிரச்சினை பற்றிப் பேசி கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை “காதல்” சந்தியா.

பிரசவமான பெண்கள் பலருக்கு  அடிக்கடி எரிச்சல், கவலை, தூக்கமின்மை, பசியின்மை போன்றவை ஏற்படுவதைப் பார்த்திருப்போம். “நல்லாத்தான் இருந்தாள்…  திடீர்னு ஏதோ ஆயிடுச்சு” என்று பலரும் நினைப்பர்.

பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான தாய்மார்களுக்கு மன அழுத்த நோய் ஏற்படும்.  இப்படியான மன அழுத்த நோய் வகையில் ஒன்று  கொலை செய்யவும்தூண்டும்.

ஷேமாவுடன் சந்தியா

ஆம்.. மூன்று வாரங்களுக்கு முன் சென்னையில் இப்படி ஓர் சம்பவம் நடந்தது நினைவிருக்கலாம்.

சென்னை வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வெங்கண்ணா  இவருடைய மனைவி உமா. சமீபத்தில்தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி இரவு பெற்றோருடன் படுத்து இருந்த பச்சிளம் குழந்தையை மறுநாள் காலை காணவில்லை.

குடும்பமே பதறியபடி தேடியது. குழந்தை கிடைக்காததால் காவல்துறையில் புகார் செய்தார்கள்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர்.

நைட்டி அணிந்த பெண்மணி ஒருவர் நள்ளிரவில்  குழந்தையுடன் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. நைட்டி அணிந்த பெண்மணி, குழந்தையின் தாய் உமாவைப்போல இருக்கவே, அவரிடம் காவல்துறையினர்  தீவிரமாக விசாரிக்க… நள்ளிரவில் குழந்தையை ஏரியில் வீசிக்கொன்றதை ஒப்புக்கொண்டார்.

அனைவருக்கும் அதிர்ச்சி. காவல்துறையினர், உமாவுக்கு வேறு தொடர்புகள் இருக்குமோ என சந்தேகித்தனர். ஆனால் விசாரணையில் அப்படி ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.

சரி, குழந்தையைக்  கொன்றது ஏன்?

தாய் உமா கூறிய காரணம் இதுதான்

“குழந்தை பிறந்ததில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும்போது எனக்கு மார்பகத்தில் கடுமையான வலி ஏற்பட்டு வந்தது. இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. மருத்துவமனையில் காண்பித்து மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்.

குழந்தையைக் கொன்ற உமாவும், குழந்தையும்

குழந்தையை வேறு யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம் என்று நான் கூறியதையும் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்துபோனேன். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்  ஏரியில் வீசி குழந்தையைக் கொன்றுவிட்டேன்” என்றார்.

அவர் கூறிய காரணத்தைக்கேட்டால்.. இதற்காக பெற்ற குழந்தையைக் கொல்வார்களா என்று தோன்றும்.

அவர்,  மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.

இந்த நிலையில், பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு வரும் மன அழுத்த நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் நடிகை சந்தியா.

இதோ.. சந்தியா சொல்வதைக் கேளுங்கள்..

“`என் மகள் ஷேமாவுக்கு இப்போது இரண்டரை வயதாகிறது. இவள் பிறந்த போது எனக்கும்  மன அழுத்த பிரச்சினை ஏற்பட்டது.

அந்த காலகட்டத்தில் சுமார் இரண்டு மாதங்கள்…  தினமும் மாலை 5 – 7 மணி வரை என்னை அறியாமல் அழுகை வரும். அதற்கான காரணமும் தெரியாது.

நல்லவேளையாக இந்த மன அழுத்த நோய் குறித்து ஏற்கெனவே நான் கொஞ்சம் அறிந்தருந்தேன்.

ஆகவே உடனடியாக மருத்துவரை சந்தித்தேன். அவர், “இது பெரும்பாலான தாய்மார்களுக்கு வரும் இயல்பான பிரச்னைதான். மனதில் அதீத கவலை இருக்கும்.  காரணமே இல்லாம தினமும் ஒருமுறையோ, சிலமுறையோ அழுகை வரும். அப்போதெல்லாம் கவலை தீர அழுதுவிடுங்கள்.

உங்கள் உணர்வைப் புரிந்துகொள்வது பிறருக்கு கடினம். அதற்காக மனம் சோர்ந்து விடாதீர்கள். வருத்தப்படாதீர்கள். சிறிது காலத்தில் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும். எந்த சூழலிலும் குழந்தையை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் மருத்துவர்.

என் குடும்பத்தினர் என் நிலையைப் புரிந்துகொண்டார்கள். அதனால் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்..  இரு மாதங்களில், இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிட்டது.

பிறகு எனக்குத் தெரிந்த தாய்மார்களுக்கு இந்தப் பிரச்னையைப் பற்றி ஆலோசனைகள் வழங்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த  பிரச்னைப் பற்றி விழிப்பு உணர்வு அதிகரிக்க வேண்டும். அந்த நேரத்தில் பெண்களுக்குக் குடும்பத்தினர் ஆதரவாக இருக்க வேண்டும்” என்கிறார் சந்தியா.

இந்த  மன அழுத்த நோயால்,  ஒரு தாய் பாதிக்கப்பட்டிருக்கிறார்  என்பதை எப்படி  தெரந்துகொள்வது? இதற்கான சிகிச்சை முறை என்ன?

பிரபல மனநல மருத்துவர் பி.ஆனந்தனை தொடர்பு கொண்டு பேசினோம்.

குழந்தையை தாய் கவனிப்பது போல அவரதை கணவர் கவனித்துக்கொள்ள வேண்டும்..

அவர், “

குழந்தை பிறந்தபிறகு  தாய்மார்களுக்கு மன ரீதியாக மூன்ற வித மன அழுத்த நோய்கள் வர வாய்ப்பு உண்டு.  அவை,  “போஸ்ட்பார்டம் ப்ளூஸ்” (Postpartum blues, )   . போஸ்ட்பார்டம் டிப்ரசன் (Postpartum depression),  போர்ஸ்பார்டம் சைக்கோசிஸ்.( postpartum psychosis) ஆகியவை.

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது…  இவை மூன்றும் ஒன்று போல் தோன்றும் வெவ்வேறு நோய்கள் ஆகும்.

. “போஸ்ட்பார்டம் ப்ளூஸ்”  என்கிற மன அழுத்த நோய், ஐம்பது சதவிகித தாய்மார்களுக்கு வருகிறது.

இந்நோயால் ஏற்பட்டால் சரியாக சாப்பிடமாட்டார்கள்,  கவலையான மனநிலையிலேயே இருப்பார்கள், அடிக்கடி அழுவார்கள். இந்த காலகட்டத்தில் தாய்மார்களிடம் வழக்கத்தைவிட அதிகமான அக்கறையுடனும் பரிவுடனும் குடும்பத்தினர் இருக்க வேண்டும். மற்றபடி மருத்துவரின் கவுன்சலிங்கூட தேவையில்லை. தானாகவே இரண்டு மாதங்களில் இந்நோயின் தாக்கம் போய்விடும்.

இதுதான் நடிகை சந்தியாவுக்கு வந்திருக்கிறது.

ஆ. போஸ்ட் டிப்ரசன்” என்பது இன்னொரு வகை நோய். இது பதினைந்து சதவிகித பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்நோய் தாய்க்கு மட்டுமல்ல.. தந்தைக்கும் வரும்.  குழந்தை பிறந்த ஏழு நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் தாக்கும்.  “போஸ்ட்பார்டம் ப்ளூஸ்” நோயின் அத்தனை அறிகுறிகளும் இருக்கும். அதே நேரம்.. தற்கொலை எண்ணம் அதிகரிக்கும். ஆகவே இவர்களை கூடுதல் கவனத்துடன் குடும்பத்தினர் கவனிக்க வேண்டும். மருத்துவர்களின் கவுன்சலிங் அவசியம்.

மருத்துவர் பி.ஆனந்தன்

இ. போர்ஸ்பார்டம் சைக்கோசிஸ்”.  இது பெரும்பாலும் குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாட்களில் தாய்க்கு ஏற்படும். அந்த காலகட்டத்தில் தாய்மார்கள் ஆவேசமாக இருப்பார்கள். பொருட்களை தூக்கி வீசுவது, குழந்தையை துன்புறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள், அழமாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் தன்னைக் குறை சொல்லிப் பேசுகிறார்கள் என்கிற சந்தேகம் இருக்கும்…  காதில் ஏதோ ஒலி, பேச்சு கேட்பது போல் இருக்கும். கொலை வரை கொண்டுபோகக்கூடிய மன அழுத்த நோய் இது. இதற்கு மருத்துவரின் கவுன்சிங் மட்டுமல்ல… மருந்து, மூளைக்கு எலக்ட்ரிக் ஷாக்  ஆகியவை அவசியம். இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுதும் சிகிச்சை தேவைப்படலாம்.

இது பரம்பரையாக வரலாம். பாதிக்கப்பட்டவரின் தாய் அல்லது உறவினருக்கு இந்நோய் இருந்திருக்கலாம்.

வேளச்சேரியில் தன் குழந்தையைக் கொன்ற உமாவுக்கு இந்நோய்தான் இருந்திருக்கும்.

ஆயிரத்தில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு இந்நோய் ஏற்படக்கூடும்.

மேற்கத்திய நாடுகளில் இந்நோய்கள் குறித்த விழிப்புணர்வு உண்டு. ஆனால் இங்கே இல்லை.  ஆகவே இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்” என்றார் மனநல மருத்துவர் பி.ஆனந்தன்