“மைனா” நந்தினியின் கணவர் கார்த்தியின் தற்கொலைக்கு காரணம் என்ன? தொடரும் மர்மம்!

சென்னை:

“வம்சம் திரைப்படத்தில் அறிமுகமாகி “கேடிபில்லா கில்லாடி ரங்கா” உட்பட பல படங்களில் நடித்தவர் நந்தினி. இதற்கிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் – மீனாட்சி”  தொடரில் “மைனா” என்ற கேரக்டரில் நடித்து மிகவும் புகழ் பெற்றார்.

நந்தினிக்கும் அவரது சென்னையில்  உடற்பயிற்சிக்கூடம் வைத்திருந்த ஜிம் மாஸ்டர் கார்த்திக்கிற்கும் காதல் ஏற்பட்டது.  கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி மதுரையில் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.  சென்னை வளசரவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள்.

இந்த நிலையில், திருமணமாகி ஒரு ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்குக் காரணம் நந்தினியின் அப்பா ராஜேந்திரன்தான் என்றும் கார்த்திக் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆகவே நந்தினியின் அப்பாவிடம் விசாரணை நடத்துகிறது காவல்துறை.

நந்தினி – கார்த்திக்

கார்த்திக்கின் உறவினர்கள், “திருமணமான சில மாதங்களிலேயே கார்த்திக்குடன் சண்டை போட்டு, தனது தந்தை வீட்டுக்கு மைனா சென்றுவிட்டார். விவாகரத்து நோட்டீஸும் அனுப்பிவிட்டார்.  கார்த்திக், மணமுறிவு வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் நந்தினி, பிரிவதிலேயே உறுதியாக இருந்தார்.

“விவாகரத்து கிடைக்கும் வரை நீ என் மனைவிதான். அதுவரை சேர்ந்திருக்கலாம்” என்று கார்திக் சொன்னதையும் நந்தினி கேட்கவில்லை. தவிர, நந்தினியின் அப்பா  ராஜேந்திரன், கார்த்திக்கை மிகவும் மோசமாக  திட்டினார். இதனால்தான் மனம் உடைந்து கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார்” என்கிறார்கள்.

நந்தினி தரப்பிலோ, “அறியாமல் நந்தினி, கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார். கார்த்திக் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. தானாக விரும்பி காதல் திருமணம் செய்துகொண்டதால் எல்லா கொடுமைகளையும் நந்தினி பொறுத்துகொண்டு இருந்தார். ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் தந்தையின் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் நந்தினியின் தந்தைக்கு எந்த அளவு மனம் வேதனைப்பட்டிருக்கும்?  “என் மகளை வைத்து ஒழுங்காக குடும்பம் நடத்த முடியாதா” என ஆத்திரப்பட்டு கேட்டார். இதற்காக ஒருவர் தற்கொலை செய்துகொள்வாரா…“ என்கிறார்கள்.

கார்த்திக்கின் பழைய ரிக்கார்டுகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக சொல்லி பலரை ஏமாற்றியிருக்கிறார். அதனால் பலமுறை அடிதடி தகராறுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அது மட்டுமல்ல நந்தினிக்கு முன்பாகவே வெண்ணிலா என்ற பெண்ணை காதலித்திருக்கிறார் கார்த்திக். இந்த நிலையில் அவரை கைவிட்டு நந்தினியை திருமணம் செய்துகொண்டார்.

இதனால் வெண்ணிலா, தற்கொலை செய்துகொண்டார். தனது மரணத்துக்குக் காரணம் கார்திக்தான் என்று கடிதமும் எழுதி வைத்திருந்தார். இதனால் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் உண்மைதான் என்கிறார் நந்தினி. மேலும், “கார்த்திக் சிறையில் இருந்தபோது, அதை வெளியில் யாரிடமும் நான் சொல்லவில்லை. என் குடும்பத்தினரிடம்கூட, கார்த்திக் வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதாகவே  சொன்னேன்” என்கிறார்.

அதுமட்டுமல்ல.. “கார்த்திக்குடன் எவ்வளவோ அனுசரித்து போனேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவருடன் வாழவே முடியாது என்கிற நிலையில்தான் பிரிந்து, தாய் வீட்டுக்கு வந்தேன். அப்படியும் அவர் டார்ச்சர் தொடர்ந்தது. இதை என் அப்பா தட்டிக்கேட்டார். அதுதான் நடந்தது” என்கிறார் நந்தினி.

கடிதம்…

இதற்கிடையே கார்திக்குக்கு நிறைய கடன்கள் இருந்ததாகவும். பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

இன்னொரு முக்கிய விசயம், தனது இறுதி ஆசையாக தனது உடலை மறைந்த காதலி வெண்ணிலாவின் உடல் அருகே புதைக்க வேண்டும் என்றும் ஒரு கடிதம் எழுதிவைத்திருந்திருக்கிறார் கார்த்திக்.

கார்த்திக்கின் தற்கொலைக்குக் காரணம்…

கடிதத்தில் எழுதியிருந்தபடி, மனம் நோகும்படி மாமனார் பேசியதா..

கடன் தொல்லையா..

வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றியதால் ஏற்பட்ட  பிரச்சினைகளா

தன்னால் வெண்ணிலா  தற்கொலை செய்துகொண்டார் என்கிற மன உறுத்தலா…

மர்மம் தொடர்கிறது.

English Summary
actress maina nandhini husband karthik sucide:  remains suspense